சேட்டை செய்வது முதல் கூட்டமாக உண்டு, உறங்கி அன்பை பரிமாறிக் கொள்வது வரை மனிதர்களை ஒத்த பண்புகளைக் கொண்ட குரங்குகள் என்றுமே நம்மைக் கவரத் தவறியதில்லை.


குறிப்பாக சிம்பன்சி குரங்குகள் தவழும் குழந்தைகளை ஒத்த அறிவுத்திறன் அதாவது 20 - 25  ஐக்யூ அளவைக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.


மனிதப் பண்புகளை ஒத்த சக உயிரினங்களான இந்த சிம்பன்சி குரங்குகளின் செயல்களைக் கண்டுகளிக்க நேரிலும், இணையத்திலும் ஆகட்டும்  ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் முன்னதாக தன் குழந்தையை முதன்முதலாகப் பார்த்து மெய்சிலிர்த்த சிம்பன்சி ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.


அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உள்ள விச்சிடா நகரில் உள்ள செட்விக் கண்ட்ரி மிருகக்காட்சி சாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிசேரியன் மூலம் பிரசவித்த மாலே எனும் இந்த சிம்பன்சி இரண்டு நாள்களுக்குப் பிறகு தன் குட்டியை சந்திக்கச் சென்றுள்ளது.


சிசேரியன் பிரசவத்தில் பிறந்த குட்டிக்கு மூச்சுத்திணறல் பிரச்னை ஏற்பட்ட நிலையில், இரண்டு நாள்களாக வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டு வந்துள்ளது. தொடர்ந்து உடல் நலன் தேறிய குட்டி மீண்டும் தாய் சிம்பன்சியுடன் சேர்க்கப்பட்ட நிலையில், அதனைப் பார்க்க வந்த தாயின் செய்கை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தன் குட்டியை பிரசவித்த பிறகு பார்க்காத நிலையில், குட்டி இறந்து விட்டதாக சிம்பன்சி நினைத்துள்ளது. தொடர்ந்து குட்டியை பார்க்க அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், முதலில் தயங்கி தூரமாக நின்று பார்க்கும் தாய் சிம்பன்சி, பின் குட்டி கைகளை நீட்டியதும், ஓடிச் சென்று அதனைத் தூக்கி ஆரத்தழுவி, விம்மியபடி அதனை முத்தமிடுகிறது. 


 



இந்தக் குட்டி குரங்குக்கு குச்சேஸா (Kucheza) எனப் பெயரிடப்பட்டுள்ளதாக முன்னதாக மிருகக்காட்சி சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.


இந்நிலையில், ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ 1.2 கோடி பார்வையாளர்களையும், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் பெற்று வைரலாகி வருகிறது.


‘இதைப் பார்த்து நீங்கள் கண் கலங்கவில்லை என்றால் நீங்கள் மனிதர்களே அல்ல’ என உணர்ச்சிப் பெருக்குடன் கமெண்ட்ஸ் பகிர்ந்து வருகின்றனர் ஃபேஸ்புக் வாசிகள்.


கப்புசின் குரங்கின் சேட்டை!


இதேபோல் முன்னதாக உலகின் குறும்புக்கார விலங்குகளில் ஒன்றான கப்புச்சின் குரங்கு ஒன்று, காவல் துறையின் அவசர எண்ணுக்கு அழைப்பு விடுத்த சம்பவம் இணைவாசிகளை சிரிப்பில் ஆழ்த்தி வைரலானது.


’ரூட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் குட்டி கப்புச்சின் குரங்கு முன்னதாக மிருகக்காட்சி சாலையின் கோல்ஃப் மைதானத்தில் மறந்து வைத்துச் செல்லப்பட்ட செல்ஃபோனை எடுத்து அழைப்பு விடுத்ததும் கண்டறியப்பட்டுள்ளது.


"பொதுவாக கப்புச்சின் குரங்குகள் மிகவும் ஆர்வமுள்ளவை. நாம் கையில் வைத்திருக்கும் எவற்றையும் சட்டென பிடுங்கியோ அல்லது பொருள்களை எடுத்தோ பொத்தான்களை அழுத்தும். அதைத்தான் ரூட் செய்தது... இந்த முறை அழைப்பதற்கான சரியான கலவையிலான எண்களை அழுத்தியுள்ளது” என மிருகக்காட்சி சாலை தரப்பினர் குறும்புடன் தெரிவித்துள்ளனர்.


 



இந்நிலையில், இந்தக் குறும்புக்கார குரங்கின் பல புகைப்படங்களையும் முன்னதாக மிருகக்காட்சி சாலையினர் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.