தீவிரமான காலநிலை தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே புவி வெப்பமடைதலை 1.5° செல்சியசிற்குள் கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஐ.பி.சி.சி. அமைப்பின் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழு ஜெனிவாவில் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை தணிப்பதற்கான வழிகள் குறித்த அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. தற்போது ஐ.பி.சி.சி. தன்னுடைய ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையின் காலகட்டத்தில் உள்ளது. இந்த ஆறாவது அறிக்கை காலமான 2015 முதல் 2023 வரை மொத்தமாக 8 அறிக்கைகள் வெளியிடப்படும். ஏற்கெனவே இதில் 6 அறிக்கைகள் வெளியிடப்பட்டு விட்டன. தற்போது ஐ.பி.சி.சியின் மூன்றாவது பணிக் குழு காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைத் தணிக்க பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான வாய்ப்புகள், வழிகள் குறித்த அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.
இவ்வறிக்கையில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றமானது மனிதகுல வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 2010-2019 காலகட்டத்தில் அதிகமாக இருந்துள்ளதாகவும் ஆனால், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தின் வேகம் அண்மையில் குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உடனடியாக, ஆழமான நடவடிக்கைகள் மூலமாக அனைத்துத் துறைகளிலும் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைக்காவிட்டால் புவி வெப்பமடைதலை 1.5° செல்சியசிற்குள் கட்டுப்படுத்த முடியாமல் போகும் என அறிஞர்கள் எச்சரித்துள்ளனர். இருப்பினும் உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கான செயல்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் ஐ.பி.சி.சி. ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Global net anthropogenic GHG emissions (GtCO2-eq yr-1) 1990–2019
இந்த அறிக்கை வெளியீட்டின்போது பேசிய ஐ.பி.சி.சி. தலைவர் ஹோசுங் லீ “ வரலாற்றில் முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம். இன்று நாம் எடுக்கும் முடிவுகள்தான் வாழத்தகுந்த ஒரு எதிர்காலத்தை நமக்கு அளிக்கும். புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்துவதற்கான வழிகளையும், கருவிகளையும் நாம் கொண்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
மேலும் இந்த அறிக்கை 2030 ஆண்டிற்குள் அனைத்துத் துறைகளிலும் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைப் பாதியாக குறைக்க வழிகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்துவதற்கு ஆற்றல் துறையில் பெரியளவில் மாற்றங்கள் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அறிவியலாளர்கள் கணிசமான அளவில் புதைப்படிம எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்தல், பரவலாக்கப்பட்ட மின்மயமாக்கல், மாற்று எரிபொருள் பயன்பாடு போன்றவையும் இதில் அடங்கும் எனத் தெரிவித்துள்ளனர்.
புவி வெப்பமடைதலை 1.5° செல்சியசிற்குள் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் 2030ம் ஆண்டிற்குள் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை 43% குறைக்க வேண்டும். அதேநேரத்தில் மீத்தேன் வெளியேற்றத்தையும் மூன்றில் ஒரு பங்கு குறைக்க வேண்டும். கார்பன் சேமிப்பு வசதி இல்லாத நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு பயன்பாட்டை 2050ம் ஆண்டிற்குள் முறையே 100%, 60% மற்றும் 70% குறைக்க வேண்டும். அதாவது 2050ம் ஆண்டிற்குள் கார்பன் சேமிப்பு தொழில்நுட்பம் இல்லாத அனல்மின் நிலையங்கள் அனைத்தையும் 2050ம் ஆண்டிற்குள் மூட வேண்டும். இந்தியாவின் மத்திய மின்சார ஆணையத்தின் தரவுகளின்படி 211GW உற்பத்தித் திறனுக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிற நிலக்கரி அனல்மின் நிலையங்கள் இந்தியாவில் உள்ளன. இன்னும் கூடுதலாக 31GW உற்பத்தித் திறன் கொண்ட நிலக்கரி அனல்மின் நிலையங்கள் கட்டுமான நிலையிலும், 21GW உற்பத்தித் திறன் கொண்ட நிலக்கரி அனல்மின் நிலையங்கள் கட்டுமானத்திற்கு முந்தைய நிலையிலும் உள்ளன. கட்டுமான நிலையில் உள்ள ஒரு அனல்மின் நிலையத்தில் கூட carbon capture and storage வசதியில்லை. இந்த வசதியுடன் அனல்மின் நிலையங்கள் அமைப்பதற்கு ஆகும் செலவு புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு ஆகும் செலவை விட அதிகமாகும்.
இவையனைத்தையும் செய்தாலும் கூட 1.5° செல்சியஸ் வெப்பநிலையை தற்காலிகமாக எட்டி அதன் பின்னர் இந்த நூற்றாண்டின் இறுதியில் வெப்பநிலை மீண்டும் குறையக்கூடும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நகரங்களும் பிற நகரம் சார்ந்த பகுதிகளும் குறிப்பிடத்தக்க அளவில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான வாய்ப்புகளை வழங்குகின்றன. குறைந்த அளவிலான ஆற்றலை பயன்படுத்தும் வகையில் நகரங்களை வடிவமைப்பதன் மூலம் இதனை அடையலாம் என ஐ.பி.சி.சி. ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழிற்துறையில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பது மிகவும் முக்கியமான காலநிலை நடவடிக்கை என அறிக்கை கூறுகிறது. பொருட்களை திறம்பட பயன்படுத்தி, மறுபயன்பாடு, மறுசுழற்சி செய்வதன் மூலம் இதனை அடையலாம் எனக் கூறப்பட்டுள்ளது. உலகளாவிய பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தில் நான்கில் ஒரு பங்கு தொழிற்துறையைச் சார்ந்தது எனவும் இதில் கார்பன் சமநிலையை அடைவது மிகவும் சவாலானது எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை தணிக்கும் நடவடிக்கைகளான சூரிய ஆற்றல், காற்றாலை ஆற்றல் உற்பத்தி, நகர அமைப்புகளின் மின்மயமாக்கல், பசுமை நகர கட்டமைப்புகள், ஆற்றல் செயல்திறன், காடுகள் மற்றும் பயிர்கள்/புல்வெளிகள் மேலாண்மை போன்ற செயல்பாடுகள் அனைத்தும் தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமானவை என்றும் பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடியவை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற பல தணிப்பு நடவடிக்கைகளில் காற்று மாசுபாடு குறைதல், நச்சுமிகுந்த கழிவுகளின் உற்பத்தி குறைதல் போன்ற கூடுதல் பலன்கள் இருந்தாலும் பெரிய அளவிலான குவிக்கப்பட்ட மின்னுற்பத்தியால் உயிர்ப்பன்மய இழப்பும் ஏற்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டிற்குப் பிறகு குறைந்த அளவில் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் தொழில்நுட்பங்களின் விலை தொடர்ச்சியாக குறைந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஐ.பி.சி.சியின் ஐந்தாவது மதிப்பீட்டு ஆய்வறிக்கைக்குப் பின்னர் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைத் தணிப்பதற்காக கொள்கைகளும், சட்டங்களும் விரிவடைந்துள்ளதாகவும் இருப்பினும் கடந்த ஆண்டு நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டிற்கு முன்பாக உலக நாடுகள் தாமாக முன்வந்து அளித்த செயல்திட்டங்களை செயல்படுத்தினாலும் கூட சராசரி வெப்பநிலை இந்த 21ம் நூற்றாண்டில் 1.5° செல்சியசை எட்டிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.சி.சி.யின் இந்த அறிக்கை நமக்கு உணர்த்துவதெல்லாம் இந்த உலகை நம்முடன் சேர்ந்து வாழும் அத்தனை உயிர்களுக்கும் பாதிப்பில்லாமல் பாதுகாக்க பல்வேறு வழிகள் இன்னமும்கூட உள்ளன. ஆனால், அந்த நீடித்த பாதையில் செல்ல உடனடி நடவடிக்கைகள் தேவை. ஐ.பி.சி.சி. மூன்றாவது பணிக்குழுவின் இணைத் தலைவர் ஜிம் ஸ்கியா இந்த அறிக்கை குறித்த பேசியபோது “ இப்போது நடவடிக்கை எடுக்காவிட்டால் பிறகு எப்போதும் எடுக்க முடியாமல் போகும். புவி வெப்ப நிலை உயர்வை 1.5° செல்சியசிற்குள் கட்டுப்படுத்த அனைத்துத் துறைகளிலும் உடனடி நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. அது நடக்காவிட்டால் உலகைக் காப்பது முடியாமல் போகும்” என்றார்.
முழு அறிக்கைக்கு: https://www.ipcc.ch/working-group/wg3/