இஸ்லாமிய பள்ளியில் 13 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் கடந்த திங்கள் கிழமையன்று மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது., அவர் தொடக்கத்தில் ஆயுள் தண்டனை பெற்ற பின்னர் மரண தண்டனைக்கான தீர்ப்பை மேல்முறையீட்டின் மூலமாக வழக்கறிஞர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
ஆசிரியை ஹெர்ரி விரவனின் வழக்கு ஒட்டுமொத்த இந்தோனேசியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் நாட்டின் மத உறைவிடப் பள்ளிகளில் பாலியல் வன்முறையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
கடந்த பிப்ரவரியில் பாண்டுங் நகரில் உள்ள நீதிமன்றத்தால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், மரண தண்டனை தரவேண்டும் எனக் கோரி வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்தனர்.
"(நாங்கள்) இதன் மூலம் பிரதிவாதிக்கு மரண தண்டனை விதிக்கிறோம்," என்று நீதிபதி கடந்த திங்கள் அன்று பாண்டுங் உயர் நீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
ஹெர்ரியின் வழக்கறிஞர் ஐரா மாம்போ, மேல்முறையீடு இருக்குமா என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார், நீதிமன்றத்தின் முழு தீர்ப்பையும் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
வழக்கறிஞரின் அலுவலகத்தைத் தொடர்புகொண்டபோது அவரின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிப்பதற்கு முன் இறுதி தீர்ப்பைப் பெற காத்திருக்கிறோம் என்று கூறினார்.
2016 மற்றும் 2021க்கு இடையில், ஹெர்ரி 12 முதல் 16 வயதுக்குட்பட்ட 13 சிறுமிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டார். மேலும் பாதிக்கப்பட்டவர்களில் எட்டு பேர் கருவுற்றனர் என்று பிப்ரவரி மாதம் ஒரு நீதிபதி கூறியுள்ளார். நாட்டின் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சர் உட்பட இந்தோனேசிய அதிகாரிகளும் மரண தண்டனைக்கான கோரிக்கையை ஆதரித்தனர், இருப்பினும் மரண தண்டனையை எதிர்க்கும் நாட்டின் மனித உரிமைகள் ஆணையம் இது பொருத்தமானது அல்ல என்று கூறியுள்ளது.
உலகின் மிகப்பெரிய இஸ்லாமியப் பெரும்பான்மை நாடான இந்தோனேசியாவில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய உறைவிடப் பள்ளிகள் மற்றும் பிற மதப் பள்ளிகள் உள்ளன. அவை பெரும்பாலும் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட குடும்பங்களின் குழந்தைகள் கல்வி பெறுவதற்கான ஒரே வழியை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.