சமூக வலைத்தளங்களில் பிரபலமாக மாறுவதற்காகப் பலரும் பல வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படியொரு முயற்சியாக இந்தோனேசியாவைச் சேர்ந்த மனிதர் ஒருவர் யாருமே செய்யாத ஒன்றைச் செய்து, பலரின் புருவங்களை உயர்த்த வைத்துள்ளார். அவர் செய்த செயல் அவர் விரும்பியவாறு கடந்த வாரம் அவரை டிரெண்டிங்கில் இடத்தை அளித்திருக்கிறது. அப்படி என்ன செய்தார் அந்த நபர்?


இந்தோனேசியாவைச் சேர்ந்த கொய்ருல் அனம் என்ற நபர் கடந்த வாரத்தில் டிரெண்டிங்கில் முன்னணி இடத்தில் காணப்பட்டார். அவர் டிரெண்டிங்கில் இடம்பெற்றதற்கான காரணம், அவர் தனது குக்கரைத் திருமணம் செய்துகொண்டது தான். ஆம், உங்களால் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால், கொய்ருல் அனம் தனது வீட்டில் தான் பயன்படுத்தும் குக்கரைத் திருமணம் செய்துகொண்டதால் தான் ஒரே நாளில் சர்வதேச அளவில் டிரெண்டிங்கில் இடம்பெற்றார். 



தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் படங்களைப் பதிவிட்டுள்ள கொய்ருல் அனம், இந்தோனேசியாவின் பாரம்பரிய திருமண உடை அணிந்திருப்பதோடு அவரது குக்கருக்கும் மணப்பெண்ணைப் போல அலங்காரம் செய்யப்பட்டு, முக்காடு ஒன்றையும் அணிவித்திருந்தார். அவரது அருகில் குக்கரை வைத்தபடி, புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட கொய்ருல் அனல், தனது குக்கரைத் திருமணம் செய்வதற்காக தானும் தனது குக்கரும் ஒப்புதல் கையொப்பம் இடுவதாகப் படங்களைச் சேர்த்துள்ளதோடு, திருமணம் முடிந்தவுடன் குக்கரை முத்தமிட்டு கூடுதலாக லைக்ஸ் அள்ளியுள்ளார். 


தனது பதிவில் கொய்ருல் அனம், தான் குக்கரைத் திருமணம் செய்துகொண்டதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். தனது குக்கர் வெள்ளையாக இருப்பதாகவும், தனக்குக் கீழ்ப்படிவதாகவும் குறிப்பிட்டுள்ள கொய்ருல் அனம், `நீ இல்லாமல் எனது உணவு உண்பதற்குத் தயாராவதில்லை’ என்றும் தனது குக்கர் மீதான தனது `காதலை’ வெளிப்படுத்தியுள்ளார். 



கொய்ருல் அனமுக்கும் அவரது குக்கருக்கும் திருமணம் முடிந்த நான்கு நாள்களுக்குப் பிறகு, தனது பேஸ்புக் பக்கத்தில் தனது குக்கரை விவாகரத்து செய்துள்ளதாகப் பதிவிட்டுள்ளார். அதற்குக் காரணமாகத் தனது குக்கரால் வெறும் அரிசியை மட்டும் தான் சமைக்க முடிவதாகத் தெரிவித்துள்ளார் அவர். 



கொய்ருல் அனமின் திருமணப் பதிவுகள் வைரலானதோடு, சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதனை லைக் செய்துள்ளனர். சுமார் 10 ஆயிரத்திற்கும் மேலான ஷேர்களும் அவரது பதிவுகளுக்குக் கிடைத்துள்ளது. 


இந்தோனேசியாவில் கொய்ருல் அனம் சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்படும் பிரபலமாக இருக்கிறார். மேலும் அவர் இதுபோன்ற வினோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு, வைரலாகி வருவதாக இந்தோனேசியாவின் பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன. 


அவரது இந்த வினோத திருமணப் படலமும், இணையத்தில் வைரலாவதற்கும், சமூக வலைத்தளங்களில் தனது பிரபலத் தன்மையை வளர்த்துக்கொள்வதற்காகவும் செய்த ஸ்டண்ட் மட்டுமே எனவும் கூறப்படுகிறது.