உலகிலேயே அதிக இஸ்லாமிய மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பது இந்தோனேசியா. அந்நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 87.2 விழுக்காடு மக்கள் இஸ்லாமியர்கள் ஆவர். உலகின் முக்கியமான சுற்றுலா தலமாக இந்தோனேசியா விளங்குகிறது.
இந்நிலையில், திருமண உறவிற்கு வெளியே கொள்ளப்படும் பாலியல் உறவை சட்ட விரோதமாக அறிவித்துள்ளது இந்தோனேசியா அரசு. இதற்கான சட்டம் இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேபோன்ற பல கடுமையான குற்ற சட்டங்களுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி இருப்பதன் மூலம் அது விரைவில் அமலுக்கு வரவிருக்கிறது. சட்டத்தை மீறுபவருக்கு ஓராண்டு காலம் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் ஆண்டு கூட்டத்தில் சர்ச்சைக்குரிய புதிய குற்ற சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். ஆனால், இந்தோனேசியாவிற்கு இது மிக பெரிய பின்னடைவாக இருக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
மத பெரும்பான்மையை நோக்கி நாடு செல்வதாகவும் மனித உரிமைகள் ஒடுக்கப்படுவதாகவும் மனிதரி உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். திருமணத்திற்கு வெளியே வைத்து கொள்ளும் உறவு சட்டவிரோதமாக்கப்பட்டது மட்டும் இன்றி, பல சர்ச்சையான விவகாரங்கள் புதிய குற்ற விதிகளில் இடம்பெற்றுள்ளது.
திருமணத்திற்கு முன்பு பாலியல் உறவு வைப்பது, திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவு வைப்பது, திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் இருப்பது ஆகியவையும் சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக இயற்றப்பட்ட குற்ற சட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய சட்டம் மற்றும் மனித உரிமைகள் விவகாரத்துறை அமைச்சர் யசோனா லாவோலி, "விவாதிக்கப்பட்ட முக்கியமான பிரச்னைகள் மற்றும் மாறுபட்ட கருத்துகளுக்கு இடமளிக்க நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம்.
இருப்பினும், தண்டனைச் சட்டத் திருத்தம் குறித்த வரலாற்று முடிவை எடுப்பதற்கும், காலனித்துவ குற்றவியல் சட்டத்தை நாம் விட்டுச் செல்வதற்கும் இதுவே நேரம்" என்றார்.
உலகின் முக்கிய சுற்றுலா மற்றும் முதலீட்டுத் தலமாக உள்ள இந்தோனேசியாவின் இமேஜுக்கு இது தீங்கு விளைவிக்கும் என்று வணிகக் குழுக்கள் எச்சரித்த பின்னரும் புதிய குற்ற சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தன்பாலின திருமணம் அனுமதிக்கப்படாத இந்தோனேசியாவில் உள்ள LGBTQ சமூகத்தில் இந்த விதிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
புதிய சட்டத்திற்கு ஆதரவாக பேசிள்ள சட்டம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஆல்பர்ட் ஆரி, "சட்டம் உறவை இச்சட்டம் பாதுகாக்கும். திருமணத்திற்கு முந்தைய மற்றும் திருமணத்திற்குப் புறம்பான பாலியல் உறவுகளை மனைவி, பெற்றோர் அல்லது குழந்தைகளால் மட்டுமே புகார் தெரிவிக்க முடியும்" என்றார்.
டச்சு காலனி ஆதிக்க காலத்தில் நிறைவேற்றப்பட்ட குற்ற சட்டங்களில் தற்போது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், இது பல ஆண்டுகளாக விவாத பொருளாக இருந்து வருகிறது.
இந்த புதிய சட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. திங்கள்கிழமை அன்று கிட்டத்தட்ட 100 பேர் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர்.