Indonesia Earthquake: இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்டுள்ள பயங்கர நிலநடுக்கம் அந்நாட்டின் முக்கிய தீவான ஜவாவை உலுக்கி உள்ளது. ரிக்டர் அளவில் 5.6 என பதிவாகியுள்ள நிலநடுக்கத்தில் சிக்கி 46 பேர் உயிரிழந்தனர். 700க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பயங்கரமான சேதத்தை கட்டிடங்கள் சந்தித்துள்ளன.
இதன் தொடர்ச்சியாக, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் பகுதியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்ட்டா வரை, இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
அச்சம் காரணமாக, மக்கள் சாலைகளில் அலறி ஓடினர். இதுகுறித்து மேற்கு ஜாவாவில் உள்ள சியாஞ்சூர் நகரின் நிர்வாக தலைவர் ஹெர்மன் சுஹர்மன் கூறுகையில், "சமீபத்திய தரவுகளின்படி, 46 பேர் உயிரிழந்தனர். பல பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்டவர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர்.
சுமார், 700 பேர் காயமடைந்தனர். நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்திருக்கலாம். பெரும்பாலான இறப்பு எண்ணிக்கை ஒரு மருத்துவமனையில் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையில் மட்டும் கிட்டத்தட்ட 20 பேர் இறந்துள்ளனர்.
குறைந்தது 300 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது தற்போது எனக்கு கிடைத்த தகவல். அவர்களில் பெரும்பாலோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியதால் எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. நிலநடுக்கத்திற்குப் பிறகு நகரின் சயாங் மருத்துவமனையில் மின்சாரம் இல்லை.
இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. கிடைக்கும் வாகனங்களை பிடித்து மக்கள் மருத்துவமனைக்கு சென்ற வண்ணம் இருக்கின்றனர். மருத்துவமனைக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள தார்பாயில் நிலநடுக்கத்தில் சிக்கிய உடல்கள் போடப்பட்டுள்ளன.
அதிக எண்ணிக்கையில் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால் அதிகாரிகளுக்கு அதிக சுகாதார பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். தற்போது இந்த மருத்துவமனையில் அவசர நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கிறோம்.
இன்னும், கிராமங்களில் இருந்து மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள் வந்து கொண்டே இருக்கின்றன. கிராமங்களில் இன்னும் நிறைய குடும்பங்கள் மீட்கப்படாமல் உள்ளனர்" என்றார்.
நகரத்தில் உள்ள கடைகள், மருத்துவமனை மற்றும் இஸ்லாமிய உறைவிடப் பள்ளி ஆகியவை நிலநடுக்கத்தால் கடுமையாக சேதமடைந்துள்ளன. சியாஞ்சூரில் உள்ள பல கட்டிடங்கள், அவற்றின் கூரைகள் இடிந்து விழுந்தன.
தெருக்கள் முழுவதும் இடிபாடுகள் காணப்படுகிறது. அந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.