நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுடன் சமூகப் பிரச்னைகள் குறித்து நடத்திய உரையாடல் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து குழந்தை மற்றும் கணவருடன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரியங்கா சோப்ரா தற்போது வசித்து வருகிறார். எனினும், சினிமா தாண்டி தொடர்ந்து பொதுப் பிரச்னைகளுக்காக குரல் எழுப்பியும் சமூக நலப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தியும் கவனம் ஈர்த்து வருகிறார்.
கமலா ஹாரிசுடன் சந்திப்பு
யுனிசெப் (UNICEF-ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்) அமைப்பின் பிரதிநிதியாக பங்காற்றி வரும் அவர், முன்னதாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை சந்தித்து பெண்களின் வாக்குரிமை, கருக்கலைப்பு சட்டம் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து விவாதித்துள்ளார்.
அமெரிக்காவில் செனட் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், கமலா ஹாரிஸ் உடனான பிரியங்கா சோப்ராவின் இந்த உரையாடல் அவரது அமெரிக்க ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பெண்களின் வாக்குரிமை
இது குறித்து புகைப்படங்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் பிரியங்கா பகிர்ந்துள்ளார். அதில்,
”ரூத் பேடர் கின்ஸ்பர்க்கின் கூற்றுப்படி, “முடிவுகள் எடுக்கப்படும் எல்லா இடங்களிலும் பெண்கள் இருக்கிறார்கள். இதற்கு பெண்கள் விதிவிலக்கு என்ற நிலை இருக்கக் கூடாது.”
தொடக்கத்திலிருந்தே உலகம் பெண்களின் சக்தியை குறைத்து மதிப்பிட்டே வந்துள்ளது. நாங்கள் புறக்கணிக்கப்பட்டு மௌனமாக்கப்பட்டுள்ளோம்.
ஆனால் பல தன்னலமற்ற பெண்களின் உறுதி மற்றும் விடாமுயற்சிக்கு நன்றி. இன்று நாம் ஒன்றிணைந்து தவறுகளைச் சரிசெய்வதற்கு கூட்டாகச் செயல்படக்கூடிய இடத்தில் இருக்கிறோம்.
நேற்றிரவு வாஷிங்டன் டிசியில் நடந்த மகளிர் தலைமைத்துவ மன்ற மாநாட்டில் கமலா ஹாரிஸ் உடன் நான் நடத்திய உரையாடலில் இருந்து இது ஒரு முக்கிய அம்சமாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில், மனிதகுலம் நம் வாழ்நாளில் காணக்கூடிய மிகப்பெரிய சவால்களை சந்தித்திருக்கிறது.
’ஒருநாள் என் மகள் வாக்களிப்பார்’
உறுதி மற்றும் முன்னேற்றத்திற்கான அவசரத் தேவையை நாம் எதிர்கொள்கிறோம், அமெரிக்காவில் இது வரும் நவம்பர் 8ஆம் நடைபெற உள்ள வாக்கெடுப்பில் தொடங்குகிறது. குடிமையியல் செயல்பாட்டின் ஒரு பகுதியாக இருப்பதற்கும், வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதற்கும், குறிப்பாக பெண்கள், நமது உரிமைகள் கவனிக்கப்படுவதை உறுதி செய்வதிலும் தீவிரமாக ஈடுபட வேண்டும்.
நான் இந்த நாட்டில் வாக்களிக்கப் போவதில்லை என்றாலும், என் கணவர், ஏன் ஒரு நாள் என் மகளும் வாக்களிக்க முடியும்.
கமலா ஹாரிஸ் உடனான எனது உரையாடல் மிகவும் அழுத்தமான பிரச்சினைகளை மையமாகக் கொண்டது. அதைத் தீர்ப்பதற்கு, தெளிவான பார்வையும் திட்டமும் இருக்க வேண்டும்.
இந்த முக்கியமான உரையாடல்களில், திறமையான பெண்களின் நம்பமுடியாத தொகுப்பில் என்னைச் சேர்த்ததற்கு செயலாளர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.