இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவா பகுதியில் நடந்த கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட கலவரத்தில் 127 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அரேமா எஃப்சிக்கும் பெர்செபயா சுரபயாவுக்கும் இடையிலான கால்பந்து போட்டி கஞ்சுருஹான் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது பெர்செபயா சுரபயா அணியிடம் அரேமா எஃப்சி 3-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதனால் அரேமா எஃப்சி ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைந்து ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டர். கலவரத்தை கட்டுபடுத்த காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் மைதானத்திற்குள் இருந்த போராட்டக்காரர்கள் நெரிசல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து ரசிகர்கள் தாக்கிக்கொண்டதில் 127 பேர் பலியாகியுள்ளனர். கலவரத்தின்போது மைதானத்திலேயே 34 பேர் உயிரிழந்த நிலையில் 2 போலீசார் உள்பட 93 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 180 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியா கால்பந்து சங்கம் (PSSI) நேற்று இரவு இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது, மேலும், போட்டிக்கு பிறகு என்ன நடந்தது என்பது குறித்து விசாரணையைத் தொடங்க ஒரு குழு மலாங்கிற்குச் சென்றுள்ளதாகக் கூறியது.
இதுகுறித்து இந்தோனேசியா கால்பந்து சங்கம் வெளியிட்ட அறிக்கையில், "கஞ்சுருஹான் ஸ்டேடியத்தில் அரேமா அணியின் ரசிகர்களின் செயல்களுக்கு இந்தோனேசியா கால்பந்து சங்கம் வருந்துகிறது. இந்த சம்பவத்திற்காக நாங்கள் வருந்துகிறோம், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடமும் அனைத்து தரப்பினரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். அதற்காக இந்தோனேசியா கால்பந்து சங்கம் உடனடியாக ஒரு விசாரணைக் குழுவை உருவாக்கி உடனடியாக மலங்கிற்கு புறப்பட்டுச் சென்றது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கலவரத்தின் காரணமாக இதுவரை 127 உயிர்கள் பலியாகியுள்ளதாகவும், 180 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து லீக் ஆட்டங்கள் ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும், இந்த சீசனில் எஞ்சிய போட்டிகளுக்கு அரேமா எஃப்சி அணி விளையாட தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் இந்தோனேசியா கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.