அமெரிக்கா-கனடா எல்லையில், ஒரு கைக்குழந்தை உட்பட நான்கு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கனடாவின் மத்திய மானிடோபா மாகாணத்தில் உள்ள எமர்சன் நகரத்திலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில், அமெரிக்க எல்லையில் இரண்டு பெரியவர்கள், ஒரு குழந்தை ஆகியோரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து எல்லையின் இருபுறமும் தேடியதில் நான்காவதாக ஒரு சிறுவனின் உடல் கண்டறியப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட 4 உடல்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் அந்த குடும்பம் இந்தியாவை சேர்ந்தது என்றும் கண்டறிந்தனர். இந்தியர்கள் நால்வர் இறந்ததற்கு கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்து உள்ளார்.
கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு உரிய ஆவணங்களின்றி அழைத்துச் செல்லும் கும்பலின் உதவியுடன் இவா்கள் எல்லையைக் கடக்க முயன்றபோது கடுங்குளிரில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கனடாவில் இருந்து எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற 5 இந்தியா்களைப் பிடித்து எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அவா்கள், யாரோ ஒருவா் அழைத்துச் செல்வதாக உறுதி அளித்ததால் 11 மணி நேரத்துக்கும் மேலாக நடந்து வந்ததாகக் கூறினா். அவா்களில் ஒருவா் குழந்தைக்குத் தேவையான உடைகள், பொம்மைகள் ஆகியவற்றை பையில் கொண்டு வந்திருந்தார். உயிரிழந்த நால்வரும் இவா்களுடன் வந்திருக்கலாம் என்றும், இரவு நேரத்தில் அவா்கள் பாதை மாறி சென்றிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், பணத்துக்காக எல்லையைக் கடக்க உதவும் கும்பலைச் சோ்ந்த ஸ்டீவ் ஷாண்ட் என்பவரை அமெரிக்க காவல் துறையினா் கைது செய்தனா் என உள்ளூர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. சம்பவ இடத்தில் வெப்பநிலை மைனஸ் 35 டிகிரியாக இருந்ததாக கனடா காவல் துறையினா் தெரிவித்தனா். இதற்கிடையே, உயிரிழந்த 4 பேரும் இந்தியா்கள் என கனடாவுக்கான இந்திய துணைத் தூதா் அஜய் பிசாரியா உறுதிப்படுத்தினார். இதற்கு இரங்கல் தெரிவித்துள்ள கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "என் அரசு, முடிந்தவரை உதவிகளை செய்து வருகிறது. அமெரிக்காவுடன் இணைந்து மனித கடத்தலை தடுக்க முயற்சி எடுத்து வருகிறோம். இறந்தவர்களின் கதையை கேட்டால் மனதே பதறுகிறது. மனித கடத்தலால் பாதிக்கப்பட்டு ஒரு குடும்பம் இப்படி இறந்திருப்பதும் மற்றவர்களை பயன்படுத்தி தங்களின் வாழ்க்கையை உயர்த்தி கொள்ள நினைப்பவர்களை நினைத்தாலும் பெரும் துயரமாக உள்ளது. எனவேதான், சட்டவிரோதமாக ஒழுங்கற்று எல்லைகளை கடக்க முயற்சிக்க வேண்டாம் என மக்களை கேட்டு கொண்டு வருகிறோம். இது எவ்வளவு ஆபத்து என்பது எங்களுக்கு தெரியும். இதை தடுக்க எங்களால் முடிந்த அனைத்து விதமான முயற்சிகளையும் செய்து வருகிறோம்" என்றார்.