கர்ப்பமாக இருந்தபோது கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பிற்கு சென்ற தாய், தனக்கு உதவியவர்களைக் கௌரவிக்கும் வகையில் ஐசியு செவிலியராக விரும்புகிறார். வால்சாலைச் சேர்ந்த எல்லி ரைட் கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். மேலும் சில நாட்களுக்குப் பிறகு சி-பிரிவு மூலம் 10 வாரங்களுக்கு முன்னதாகவே குழந்தை லியோவைப் பெற்றெடுத்தார். பிரசவம் கழிந்த பின்னர் அவர் உடனடியாக மூன்று வாரங்கள் கோமாவில் வைக்கப்பட்டார். 21 வயதான எல்லி 30 வார கர்ப்ப நேரத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு, வைரஸ் மற்றும் நிமோனியாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டு மிகவும் தீவிர சிகிச்சையில் இருந்தார். அதன் பிறகு அதிலிருந்து மீண்டு வந்த பிறகே தனது குழந்தையை கண்ணால் கண்டுள்ளார். எல்லி ரைட் "யார் அது?" என்று கூறி தனது மகன் லியோவை முதன்முதலில் பார்த்த தருணத்தை நினைவு கூர்ந்தார்.



இந்த சம்பவம் நடந்து சரியாக ஒரு வருடம் கழித்து, எல்லி ரைட், 'எனக்கு என் வாழ்க்கையைத் திரும்பக் கொடுத்த செவிலியர்களுக்கு ஆதரவு அளிக்க விரும்புகிறேன்' எனக் கூறினார். அதனால் ஐசியு செவிலியர் பயிற்சி பெற்று, பணியாற்ற விரும்புவதாக கூறுகிறார். "நான் பிரசவத்திற்காக சி-பிரிவுக்குச் சென்றபோது, லியோவை பார்க்கவே இல்லை, நான் அதற்குள் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டேன்," என்று அவர் தனது அனுபவத்தை கூறுகிறார். கோமா நிலையில் இருக்கும்போது அருகில் பேசுபவர்களை கேட்க முடிந்ததாகவும் அவரது அம்மா தன்னிடம் பேசுவதைக் கேட்க முடிந்ததாகவும் கூறினார். ஆனால் எழுந்த பிறகு, அது ஒரு "மாயத்தோற்றம்" என்று நினைத்திருக்கிறார். ஆனால் உண்மையில் அவரது அம்மா "எல்லி, நீங்கள் திரும்பி வர வேண்டும், நீ திரும்பி வர ஒரு குழந்தை காத்திருக்கிறது."என்று கூறியிருக்கிறார்.



அந்த சமயத்தில் புதிதாக பிறந்த லியோ வென்டிலேட்டரில் இருக்க வேண்டியிருந்தது. அந்த குழந்தையின் முதல் பிறந்தநாளை சமீபத்தில் அவரது குடும்பத்தினர் கொண்டாடினர். அந்த குழந்தையின் தாய் இப்போது பிசியோதெரபியைப் பெற்று வருகிறார். அவர் தற்போது நடப்பதற்கு சிரமப்படுகிறார். இது சரியாக சில வருடங்கள் எடுக்கும் என்றாலும், கண்டிப்பாக குணமாகிவிடும் என்று சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூறுகின்றனர். அவரது கர்ப்ப காலத்தின்போது தடுப்பூசி கிடைக்கவில்லை. ஆனால் எல்லி ரைட் உடல்நிலை தேறியதும் உடனே எடுத்துக்கொண்டார். அவர் செப்டம்பர் 2021 இல் பல்கலைக்கழகத்தில் மனநல செவிலியராகப் படிக்கவிருந்தார். ஆனால் அவரது உடல்நிலை சிக்கல்கள் காரணமாக அவர் கலந்துகொள்ள இயலவில்லை. இருப்பினும், அவரது கோமா அனுபவத்திலிருந்து, அவர் தீவிர சிகிச்சை செவிலியராக பயிற்சி பெற விரும்புகிறார். வால்சால் மேனர் மருத்துவமனையில் தனக்கு சிகிச்சை அளித்த ஊழியர்களை "தேவதைகள்" என்று குறிப்பிடுகிறார்.