உக்ரைனின் கிழக்கு எல்லைப் பகுதி பிரச்சனை குறித்தும், ரஷ்யாவின் சமீபத்திய அறிவிப்புகளையும் கூர்ந்து கவனித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
முன்னதாக, உக்ரைனிலிருந்து பிரிந்து சென்றுள்ள donetsk, Luhansk ஆகிய இரண்டு மாகாணங்களை அங்கீகரிக்கும் படிவத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கையெழுத்திட்டார். இதனையடுத்து, இந்த இரண்டு மாகாணங்களிலும் ரஷ்ய துருப்புகளை அனுப்பிவைக்கும் முயற்சிகளை அந்நாட்டு பாதுகாப்புத் துறை மேற்கொண்டு வருகிறது.
ரஷ்யாவின் இந்த செயல், உக்ரைனின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை மீறும் செயல் என்று அமெரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், ரஷ்ய- உக்ரைன் விவகாரம் குறித்து, ஐ.நா பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஐ.நா-வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ் திருமூர்த்தி கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய அவர், " ரஷ்ய-உக்ரைன் எல்லையில் பதற்றம் அதிகரிப்பது மிகவும் கவலைக்குரிய விஷயம் ஆகும். சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இருதரப்பினரும் செயல்பட வேண்டும். இந்தப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இருதரப்பினரும் தீர்வைக் காண வேண்டும்" என்று தெரிவித்தார்.
போர் பதற்றம் காரணமாக உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள் நெருக்கடியான நிலையை சந்தித்து வருகின்றனர். 20,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் மற்றும் பிரஜைகள் உக்ரைனின் பல்வேறு பகுதியில் வசித்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அதிக முன்னுரிமை கொடுக்கின்றோம்.
உக்ரைன் பிரச்சினையால் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சமீபத்திய முன்னேற்றங்களை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது. உக்ரைன், ரஷ்ய, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பு ஆகியோரைக் கொண்ட முத்தரப்பு தொடர்புக் குழு உக்ரைன் பிரச்சனையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மறுபுறம், ஜெர்மனி, பிரான்ஸ்,முன்னெடுப்பில் Normandy Format என்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில், ரஷ்யா, உக்ரைன், ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் ஆகியோர் பங்கு கொண்டுள்ளனர்.
சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய பேச்சு வார்த்தைகளை நடத்தி அமைதி தீர்மானம் கொண்டு வரப்படவேண்டும். இதற்கான, அனைத்து முயற்சிகளையும் இந்திய வரவேற்கிறது என்று தெரிவித்தார்.
உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு:
உக்ரைன் விவகாரத்தில் எந்த தனிப்பட்ட தீர்வையும் இந்தியா இதுவரை முன்வைக்கவில்லை. உதாரணமாக, donetsk, Luhansk ஆகிய இரண்டு மாகாணங்களை அங்கீகரிக்கும் ரஷ்யாவின் செயலை டி.எஸ் திருமூர்த்தி இன்று தனது உரையில் எங்கும் குறிப்பிடவில்லை. பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உக்ரைனிலிருந்து பிரிந்து சென்றுள்ள இரண்டு மாகாணாங்களுக்டன் வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவை வைத்துக் கொள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தடை விதித்துள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய பேச்சு வார்த்தைகளை நடத்தி அமைதி தீர்மானம் கொண்டு வரப்படவேண்டும் என்று இந்திய கூறியிருக்கிறது. பொதுவாக, இந்த விவகராத்தில் உக்ரைன் எல்லையில் ரஷ்ய அத்துமீறல் செய்வதாகவும், உக்ரைனின் ராணுவ இணையதளங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாகவும் மேற்கத்திய நாடுகள் குற்றஞ்சுமத்தி வருகின்றனர். ஆனால், உக்ரைன் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராணுவப்படைகளைப் பற்றி இந்தியா இதுவரை எந்தக் கருத்தையும் பதிவு செய்யவில்லை.
அமெரிக்கா- ரஷ்யா என்ற இருநாடுகளுடன் தர்க்க கண்ணோட்டத்தோடு (maintenance of a “principled distance) இந்தியா நல்லுறவை பேணிக்காத்து வருகிறது. எனவே, உக்ரைன் பிரச்சனையின் ஆழத்தையும் அதன் சாராம்சத்தையும் உணர்ந்து தனது தேர்வுகளை இந்திய முன்வைக்கிறது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.