பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று அளித்த நேர்காணல் ஒன்றில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருநாட்டுப் பிரச்னைகளையும் தீர்க்க தொலைக்காட்சி விவாதத்திற்கு அழைத்துள்ளார். 


ரஷ்யா டுடே என்ற தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், `நான் நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சியில் விவாதம் செய்ய விரும்புகிறேன்’ எனக் கூறியதோடு, இந்த விவாதத்தின் மூலம் பிரச்னைகள் முடிவுக்கு வந்தால் அது இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள இரு நாடுகளின் கோடிக்கணக்கான மக்களுக்குப் பயனாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இந்தக் கருத்து குறித்து இந்திய வெளியுறவுத்துறை தரப்பில் இதுவரை எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை. 



இம்ரான் கான்


`இந்தியா ஆபத்தான நாடாக மாறிவிட்டதால் அங்கு வர்த்தகம் மேற்கொள்வது குறைந்துள்ளது’ எனக் கூறிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது அரசின் கொள்கை அனைத்து நாடுகளுடனும் வர்த்தக உறவு கொள்வது என்றும் தெரிவித்துள்ளார். 


சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டின் மூத்த ஆலோசகர் ரஸாக் தாவூத் இந்தியாவுடனான வர்த்தக உறவு இருநாடுகளுக்கும் பயனுள்ளதாக அமையும் எனக் கூறியுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தற்போதைய கருத்து அந்நாட்டில் விவாதத்தை உருவாக்கியுள்ளது. 


தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தானின் அண்டைநாட்டு வர்த்தகத்திற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக இருப்பதாகவும், அதன் தென்மேற்கில் உள்ள ஈரான் நாடு ஏற்கனவே அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், மேற்கில் உள்ள ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக போர்ச் சூழல் நிலவுவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார். 



ரஷ்ய அதிபர் புடினுடன் இம்ரான் கான்


எனினும், பாகிஸ்தான் தனது மேற்கில் உள்ள அண்டைநாடான சீனாவுடன் வர்த்தக உறவைப் பல ஆண்டுகளாகப் பேணி வருகிறது. சீனா பாகிஸ்தான் நாட்டில் பல பில்லியன் டாலர் முதலீட்டைக் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இந்த நேர்காணல் அவர் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் வந்திறங்கியவுடன் பெறப்பட்டுள்ளது. மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்திக்கவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக ரஷ்யாவிற்கு வந்துள்ள முதல் பாகிஸ்தான் தலைவர் ஆவார். 


பொருளாதாரக் கூட்டுறவு குறித்த பேச்சு வார்த்தைக்கான இந்த இரண்டு நாள் பயணம் தற்போது உக்ரைனில் நிகழ்ந்து வரும் போர்ச் சூழலுக்கு முன்பே திட்டமிடப்பட்டுள்ளது. உக்ரைன் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், `உக்ரைன் விவகாரத்தால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. எங்களுக்கு ரஷ்யாவுடன் சுமூகமான உறவு இருக்கிறது. அதனை நாங்கள் மேலும் பலப்படுத்த விரும்புகிறோம்’ என்றும் கூறியுள்ளார்.