Artificial Intelligence : வளர்ந்து வரும் தொழில் நுட்பம் மனிதர்களுக்கு நன்மைகளை எந்த அளவிற்கு தருகிறதோ அதேபோல் தீமைகளையும் தருகிறது. செயற்கை நுண்ணறிவு என்ற தொழில் நுட்பம், தொடர் வளர்ச்சி அடைந்து வரும் சூழலில், பல சவால்களையும் மனிதர்களுக்கு தந்து வருகிறது. அனைத்து விதமான வேலைகளையும் செய்யும் அளவுக்கு ஏஐ தொழில்நுட்பம் மேம்பட்டுள்ளது.


வேலைவாய்ப்புகள் பறிபோகும் சூழல்:


இதனால், மனிதர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது. ஏஐ தொழில் நுட்பத்தை ஒழுங்கப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிபுணர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இந்த நிலையில், சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் வேலை பாதுகாப்புக்கு ஏஐ தொழில்நுட்பம் அச்சுறுத்தலாக மாறி வருவதாக அவர் எச்சரித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸில் ஆண்டுதோறும் உலக பொருளாதார மன்றத்தின் மாநாடு நடைபெறுவது வழக்கம்.


அந்த வகையில், இந்தாண்டு மாநாட்டில் பங்கேற்பதற்காக சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, சுவிட்சர்லாந்து
செல்ல உள்ளார். அதற்கு முன்பு, அமெரிக்க வாஷிங்டன் நகரில் AFP செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த நேர்காணலில், "செயற்கை நுண்ணறிவு உலகெங்கிலும் உள்ள வேலைப் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.


சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா எச்சரிக்கை:


ஆனால், உற்பத்தி அளவை அதிகரிக்கவும் உலகளாவிய வளர்ச்சியைத் தூண்டவும் மிகப்பெரிய வாய்ப்பை வழங்குகிறது. வளர்ந்த பொருளாதார நாடுகளில் 60 சதவீத வேலைவாய்ப்புகளில் ஏஐ தொழில்நுட்பம் பாதிப்பை ஏற்படுத்தும். வளரும் நாடுகளில் ஏஐ தொழில்நுட்பம் குறைவான விளைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதால், உலகளவில் 40 சதவீத வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.


எந்த அளவுக்கு அதிக திறன் கொண்ட வேலைவாய்ப்புகளில் பாதிப்பு ஏற்படுகிறதோ, அதே அளவுக்கு அதன் தாக்கமும் அதிகமாக இருக்கும். உங்களின் வேலைவாய்ப்புகள் முற்றிலும் மறைந்து போகலாம். அல்லது செயற்கை நுண்ணறிவு உங்கள் வேலையை மேம்படுத்தலாம். உற்பத்தியை அதிகப்படுத்தலாம். உங்கள் வருமானம் உயரலாம்.


செயற்கை நுண்ணறிவு வழங்கும் வேலை வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு உதவி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். எனவே செயற்கை நுண்ணறிவை நினைத்தால் கொஞ்சம் பயமாக இருக்கிறது. ஆனால், இது அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. 


பணவியல் கொள்கை நன்றாக வேலை செய்கிறது. பணவீக்கம் குறைந்து வருகிறது. ஆனால், வேலைவாய்ப்புகள் சரியாக கிடைக்கவில்லை. எனவே, மிக வேகமான அல்லது மிக மெதுவாக தளர்வடையாத பிரச்னைக்குரிய காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம்" என்றார்.