இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க நாடாளுமன்ற (காங்கிரஸ்) உறுப்பினர் பிரமிளா ஜெயபாலுக்கு ஆண் ஒருவரிடமிருந்து தொலைபேசியில் மிரட்டல் வந்துள்ளது. மோசமான வார்த்தைகளை சொல்லி திட்டிய அந்த நபர், வெறுப்பூட்டும் வகையில் பேசி, பிரமிளாவை இந்தியாவுக்கு திரும்பி செல்லுமாறு மிரட்டியுள்ளார்.






சென்னையில் பிறந்த பிரமிளா, இதுபோன்ற ஐந்து மிரட்டல் ஆடியோக்களை வியாழன் அன்று வெளியிட்டுள்ளார். வெளியிடப்பட்டுள்ள ஆடியோக்களில், ஆபாசமாகவும் தவறான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதால் அந்த குறிப்பிட்ட சில பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
மோசமான விளைவுகளை விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டியுள்ள அந்த நபர், ஒரு கட்டத்தில் இந்தியாவுக்கு திரும்பி செல்லுமாறு அச்சுறுத்துகிறார்.


55 வயதான பிரமிளா ஜெயபால், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் சியாட்டிலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் இந்திய-அமெரிக்க காங்கிரஸ் பெண்மணி ஆவார்.


“பொதுவாக, அரசியல் பிரமுகர்கள் தங்களுடைய பாதிப்பைக் காட்ட மாட்டார்கள். வன்முறையை புதிய நெறிமுறையாக ஏற்க முடியாது என்பதால் நான் இங்கு அவ்வாறு செய்யத் தேர்ந்தெடுத்தேன். இந்த வன்முறைக்கு அடித்தளமாக இருக்கும் இனவெறி மற்றும் பாலின வெறியை நாங்கள் ஏற்க முடியாது" என ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பிரமிளா ஜெயபால் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக, இந்த கோடை மாதத்தில், சியாட்டிலில் உள்ள பிரமிளாவின் வீட்டிற்கு வெளியே ஒரு நபர் துப்பாக்கியுடன் சென்றார். பிரட் ஃபோர்செல் (49) என போலிஸாரால் அடையாளம் காணப்பட்ட அந்த நபர் பின்னர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் உள்ள இந்திய - அமெரிக்கர்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரத்தின் சமீபத்திய சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.


செப்டம்பர் 1 அன்று, கலிபோர்னியாவில் ஒரு இந்திய - அமெரிக்கர் இனரீதியான அவதூறுக்கு உள்ளானார். "அழுக்கு இந்து" என்றும் "கேவலமான நாய்" என்றும் இனவெறி அவதூறுகளை அவர் சந்திக்க நேரிட்டது.


ஆகஸ்ட் 26 அன்று, நான்கு இந்திய-அமெரிக்கப் பெண்கள் மீது டெக்சாஸில் ஒரு மெக்சிகன்-அமெரிக்கப் பெண் இனரீதியாக அவதூறு செய்தார். அமெரிக்காவை அழிக்கிறார்கள் என்றும் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.