பணம் கேட்டு பெற்றோருக்கு தொந்தரவு செய்ததால் பிரிட்டனில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனை சேர்ந்தவர் தேவன் படேல். அவருக்கு வயது 49. போதை மருந்துக்கு அடிமையான அவர் அவ்வப்போது பெற்றோரை மிரட்டுவதும் துன்புறுத்துவதமாக இருந்துள்ளார். 


இந்தப் பிரச்சனை ஏற்கெனவே காவல்துறை, நீதிமன்றம் வரை சென்றுள்ளது. தேவன் படேலுக்கு நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுகளயையும் மீறி தேவன் படேல் அவரது பெற்றோரிடம் போதை மருந்து வாங்க பணம் கேட்டு அவர்களை உணர்வுப்பூர்வமாக மிரட்டியுள்ளார். இதனையடுத்து போலீஸார் அவரை கைது செய்துள்ளது. 


ஏற்கெனவே தேவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவருக்கு 5 ஆண்டுகளுக்கு சில நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்தது. அதாவது தேவன் வீட்டிற்கு நேரில் சென்று பெற்றோரை பார்க்கக் கூடாது. தொலைபேசியில் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறியதாக அவர் தற்போது 2 ஆண்டுகள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். தேவன் நீதிமன்ற உத்தரவை மீறி பெற்றோருக்கு ஒரே நாளில் 10 முறை ஃபோன் செய்துள்ளார். மேலும் வீட்டுக்கு நேரில் சென்றும் மிரட்டியுள்ளார். இதனாலேயே அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். தேவன் மீது திருட்டு வழக்குகளும் உள்ளன. இந்நிலையில் இப்போது தங்களை மீண்டும் தொந்தரவு செய்வதால் நடவடிக்கை எடுக்குமாறு அந்த வயதான பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்.


வேண்டாம் போதை எனும் பாதை:


உலக போதை மருந்து தொடர்பான அறிக்கை 2020 “உலகில் முன்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காலங்களின் போது, போதை மருந்து பயன்படுத்துபவர்கள் மலிவு விலையில் கிடைக்கும் போதைப் பொருள்களை நாடுவது; ஊசி மூலம் போதை மருந்து செலுத்தி கொள்வது; பொருளாதாரச் சரிவின் காரணமாக ஏழை எளிய மக்கள் போதை மருந்துக்கு அடிமையாவது; அதனால் ஏற்படும் பாதிப்புகளால் அல்லல்படுவது போன்றவை ஏற்படும்” என்று கூறியுள்ளது.


போதை மருந்து உட்கொள்வதற்கும் மாரடைப்பு, புற்றுநோய், சாலைப் போக்குவரத்து விபத்தின் காரணமாக ஏற்படும் காயங்கள், மன நோய் போன்ற தொற்றுநோய் அல்லாத பிற நோய்கள் ஏற்படுவதற்கும் தொடர்பு உள்ளது. போதை மருந்துகளை உட்கொள்வதன் காரணமாக ஏற்படும் கோளாறு என்பது பொது சுகாதாரப் பிரச்சினையாக -- குறிப்பாக இளைஞர்கள் மற்றும் விடலைப் பருவத்தினரின் பிரச்சினையாக உள்ளது.


சூதாடுதல், பொருள்கள் வாங்குதல், கணினி மூலமாக தகாத தொடர்பு கொள்ளுதல், கணினி மூலமாக உடலுறவு சம்பந்தப்பட்ட கவர்ந்திழுக்கும் விஷயங்களைப் பார்த்தல், ஆன்லைன் மூலமாகக் கிடைக்கும் உறவுகளுடன் அளவுக்கு அதிகமான தொடர்பு கொள்ளுதல், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாதல் போன்ற பல்வேறு போதை தரும் பழக்கங்களும் இளைஞர்கள் மத்தியில் உள்ளன. போதை மருந்து உட்கொள்வதால் ஏற்படும் கோளாறுகள், நடத்தை மாற்றங்கள் ஆகியவற்றை சீர் செய்வதற்கான சிகிச்சைகள் இப்போதெல்லாம் ஏராளமாக வந்துவிட்டன. அங்கீகரிக்கப்பட்ட மறுவாழ்வு மையங்களில் முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டு குடும்பத்தினரின் ஆதரவையும் பெற்றால் நிச்சயமாக இன்னொரு வாழ்க்கை உண்டு.