Sunita Williams: சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்ததும், மகிழ்ச்சியில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்:
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் தனது சக பணியாளரான புட்ச் வில்மோருடன், போயிங் ஸ்டார்லைனர் மூலம் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்துள்ளார். 59 வயதான சுனிதா வில்லியம்ஸ், புதிய பணியாளர்கள் கொண்ட விண்கலத்தின் முதல் பயணத்தில் பைலட்டாக செயல்பட்டு சோதனை செய்த முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார். மூன்றாவது முறையாக சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றுள்ள சுனிதா, தன்னுடன் விநாயகர் சிலை மற்றும் பகவத் கீதையை கொண்டு சென்றுள்ளார்.
உற்சாக நடனமாடிய சுனிதா வில்லியம்ஸ்:
சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்ததுமே மிகுந்த மகிழ்ச்சியடைந்த சுனிதா வில்லியம்ஸ், அங்கு நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, சர்வதேச விண்வெளி நிலையத்தின் பாரம்பரிய முறைப்படி மணி அடித்து, சுனிதா வில்லியம்ஸ் வரவேற்கப்பட்டுள்ளார். பயணம் வெற்றியடைந்ததை குறிப்பிட்டு கூகுரலிட்டவாறு உள்ளே வந்த அவர், நடனமாடியபடியே அங்கிருந்த சக ஆராய்சியாளர்களை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.தொடர்ந்து காற்றில் மிதந்தபடியே மீண்டும் நடனமாடி உற்சாகமடைந்துள்ளார்.
மூன்றாவது முயற்சியில் வெற்றி:
ஸ்டர்லைனர் நிறுவனத்தின் சார்பிலான இந்த விண்வெளி பயணம் கடந்த மாதமே மேற்கொள்ளப்பட இருந்தது. ஆனால், சிறிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக அடுத்தடுத்து இரண்டு முறை பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தான் புளோரிடாவில் உள்ள கேப் கனாவரல் விண்வெளிப் படை நிலையத்தில் இருந்து, ஏவப்பட்ட சுமார் 26 மணி நேரத்திற்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் தலைமையிலான குழு வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்துள்ளது. அதேநேரம், சிறிய ஹீலியம் கசிவு போன்ற தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இலக்கை அடைவது சுமார் ஒரு மணி நேரம் தாமதமானது குறிப்பிடத்தக்கது
சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் வழியில், விண்வெளியில் முதல் முறையாக ஸ்டார்லைனரை மேனுவல் முறையில் பறப்பது உள்ளிட்ட தொடர்ச்சியான சோதனைகளை குழுவினர் முடித்தனர். அவர்கள் ஒரு வாரம் விண்வெளியில் தங்கி பல்வேறு சோதனைகளுக்கு உதவுவார்கள் மற்றும் அறிவியல் சோதனைகளை நடத்துவார்கள். அவர்கள் ஸ்டார்லைனரில் வீடு திரும்பியதும், வழக்கமான பாணியில் கடலில் அல்லாமல், நிலத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது.