இந்திய வம்சாவளி விண்வெளி வீரர் கேப்டன் சுனிதா வில்லியம்ஸ் மீண்டும் விண்வெளிக்கு செல்ல தயாராகி வருகிறார். இந்த முறை புத்தம் புதிய விண்கலமான போயிங் ஸ்டார்லைனரில் செல்ல உள்ளார். கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 8.34 மணிக்கு (இந்திய நேரப்படி நாளை காலை 8.04 மணிக்கு) விண்கலம் புறப்பட உள்ளது.


விண்கலம் செலுத்த உள்ள இடத்தில் பயிற்சி பெற்று வரும் சுனிதா வில்லியம்ஸ் இதுகுறித்து பேசுகையில், "கொஞ்சம் பதட்டமாக இருந்தாலும் புதிய விண்கலத்தில் பறப்பது பற்றி எந்த நடுக்கமும் இல்லை. நான் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்வது என்பது வீட்டிற்கு திரும்புவது போன்ற உணர்வை தருகிறது" என்றார்.


யார் இந்த சுனிதா வில்லியம்ஸ்?


டாக்டர் தீபக் பாண்டியா, போனி பாண்டியா தம்பதியருக்கு பிறந்தவர் சுனிதா வில்லியம்ஸ். இவருக்கு வயது 59. மனிதர்கள் செல்வதற்கு பாதுகாப்பானது என ஒவ்வொரு விண்கலத்திற்கும் சான்றிதழ் அளிக்கப்படும். பின்னர்தான், அது பயன்பாட்டுக்கு வரும்.


அந்த வகையில், தயாரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த புதிய விண்கலத்தில் முதல்முறையாக பெண் ஒருவர் செல்வது இதுவே முதல் முறை. இதுவரை, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட விண்கலத்தில்தான் பெண் விண்வெளி வீரர்கள் சென்றிருக்கின்றனர்.


இதற்கு முன்பு, கடந்த 2006ஆம் ஆண்டு மற்றும் 2012ஆம் ஆண்டு என சுனிதா வில்லியம்ஸ், இரண்டு முறை விண்வெளிக்கு சென்றிருக்கிறார். விண்வெளியில் மொத்தமாக 322 நாள்கள் தங்கியுள்ளார். விண்கலத்தில் இருந்து வெளியே வந்து வீரர்கள், விண்வெளியில் நடந்து செல்வது spacewalk (விண்வெளி நடை) என அழைக்கப்படும்.


"விண்கலத்தில் விநாயகர் சிலையை எடுத்து செல்வேன்"


அந்த வகையில், அதிக முறை விண்வெளி நடை மேற்கொண்ட இரண்டாவது பெண் விண்வெளி வீரர் என்ற பெருமை சுனிதா வில்லியம்ஸையே சாரும். ஏழு முறை விண்வெளி நடை மேற்கொண்டிருந்தார். மொத்தம் 50 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு விண்வெளியில் நடந்து சென்றவர் சுனிதா வில்லியம்ஸ்.


சுனிதா வில்லியம்ஸின் தந்தை குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஜூலாசனில் பிறந்த நரம்பியல் நிபுணர் ஆவார். பின்னர், அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து ஸ்லோவேனியரான போனி பாண்டியாவை மணந்தார் தீபக் பாண்டியா.


இதுகுறித்து நாசா வெளியிட்ட தகவலில், "தற்போது போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் க்ரூ ஃப்ளைட் டெஸ்ட் மிஷனின் பைலட்டாக தயாராகி வருகிறார்" என குறிப்பிட்டுள்ளது. கடந்த 1998ஆம் ஆண்டு, விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ்.


கடந்த 2015ஆம் ஆண்டுக்கு பிறகு, நாசாவின் வணிகக் குழு திட்டத்தில் விண்வெளி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னுடைய விண்வெளி பயணம் குறித்து பேசிய சுனிதா வில்லியம்ஸ், "நாசா வணிகக் குழு விமானத்தில் விநாயகப் பெருமானின் சிலையை என்னுடன் எடுத்துச் செல்வேன். அவர்தான், என்னுடைய அதிர்ஷ்டமான கடவுள். மதத்தை தாண்டி ஆன்மீக நம்பிக்கை உள்ளது. விண்வெளியில் விநாயகப் பெருமானை தன்னுடன் வைத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். விண்வெளியில் சமோசா சாப்பிடுவது பிடிக்கும்" என்றார்.