Australian MP: இரவு நேரத்தில் வெளியே சென்று இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக, பிரிட்டானி லாகா போலீசில் புகாரளித்துள்ளார்.


பெண் எம்.பியிடம் பாலியல் அத்துமீறல்:


ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்து பகுதியில் உள்ள யெப்பூன் தொகுதியிலிருந்து அந்நாட்டின் நாடாளுமன்றத்திற்கு, 37 வயதான பிரிட்டானி லாகா தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அவர் சுகாதாரத்துறை இணை அமைச்சராகவும் உள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி நைட் அவுட் என்ற முறையில் இரவு நேரத்தில் வெளியே சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்கள் அவரை தாக்கியுள்ளனர். தொடர்ந்து, போதைமருந்து கொடுத்து அவரை மயக்கமடைய செய்து, பிரிட்டானி லாகாவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.


பிரிட்டானி லாகா போலீசில் புகார்:


போதைப்பொருளால் ஏற்பட்ட மயக்கம் தெளிந்ததும் பிரிட்டானி லாகா நேராக காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்த பிறகு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இது யாருக்கும் நடந்திருக்கலாம், துரதிர்ஷ்டவசமாக இது நம்மில் பலருக்கு நடக்கும். மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில் எனது உடலில் நான் உட்கொள்ளாத மருந்துகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. போதைப்பொருள் தன்னைக் கணிசமான அளவு பாதித்தது. இதேபோன்று பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் தன்னைத் தொடர்பு கொண்டனர். அவர்களும் "போதைக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம்”. இது சரியில்லை. போதைப்பொருள் அல்லது தாக்குதல் சம்பவங்கள் இல்லாத சமூகத்தை நாம் உருவாகக் வேண்டும்” என பிரிட்டானி லாகா குறிப்பிட்டுள்ளார்.






காவல்துறை விசாரணை:


யெப்பூனில் நடந்த சம்பவம் தொடர்பான பாலியல் வன்கொடுமை புகாரை,  விசாரித்து வருவதாக குயின்ஸ்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதே போன்று வேறு எந்த புகாரும் இல்லை என்றும், தகவல் தெரிந்தவர்கள் தங்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் வலியுறுத்தியுள்ளனர். 


ஆஸ்திரேலிய அமைச்சர் கண்டனம்:


பெண் எம்.பிக்கு நடந்த சம்பவம் தொடர்பாக, ஆஸ்திரேலிய வீட்டு வசதி அமைச்சரான மீகன் ஸ்கேன்லன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், “ பிரிட்டானி ஒரு சக ஊழியர், நண்பர், இளம் பெண் அவருக்கு நடந்த சம்பவத்தை படிப்பது மிகவும் அதிர்ச்சியூட்டுவதோடு திகிலூட்டுகிறது. வீடு, குடும்பம் மற்றும் பாலியல் வன்முறைகளில் பெண்கள் பாதிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. பெண்களைப் பாதுகாக்கவும் வன்முறைகள் நிகழாமல் தடுக்கவும் எங்களால் முடிந்த அனைத்தையும் எங்கள் அரசாங்கம் தொடர்ந்து செய்கிறது” என தெரிவித்துள்ளார்.