அமெரிக்க அரசியலை பொறுத்தவரையில் இரண்டு முக்கிய கட்சிகள்தான் இருக்கிறது. ஒன்று ஜனநாயக கட்சி. மற்றொன்று குடியரசு கட்சி. அதிபர் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் களமிறங்கினாலும், இந்த இரண்டு கட்சி வேட்பாளர்களுக்கிடையேதான் போட்டி இருக்கும்.


இந்த சூழிலில், அமெரிக்க அதிபர் தேர்தல், அடுத்தாண்டு நவம்பர் 5ஆம் தேதி நடைபெறுகிறது. தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்தாண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதை தொடர்ந்து, அடுத்த தேர்தலிலும் தான் போட்டியிட உள்ளதாக பைடன் அறிவித்துள்ளார். 


அமெரிக்க அதிபர் தேர்தலில் குதித்த விவேக் ராமசாமி:


பைடனை தவிர்த்து, ராபர்ட் கென்னடி, மரியான் வில்லியம்சன் ஆகியோரும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் தேர்வில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். வேட்பாளர் தேர்வில் போட்டியிட்டு, சொந்த கட்சியினர் மத்தியில் யாருக்கு செல்வாக்கு அதிகம் இருக்கிறதோ அவரே, கட்சியின் சார்பில் அமெரிக்காவில் தேர்தலில் நிற்க முடியும்.


அதேபோல, முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் உள்ளிட்டோர் குடியரசு கட்சி சார்பில் அதிபருக்கான வேட்பாளர் தேர்வில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். இவர்களை தவிர, இந்திய வம்சாவளியான நிக்கி ஹேலி, விவேக் ராமசாமி ஆகியோரும் வேட்பாளர் தேர்வில் போட்டியிட உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.


அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் உள்ள நிலையிலும், அதற்கான அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. 
குறிப்பாக, தொழிலதிபரான விவேக் ராமசாமிக்கு பல்வேறு தரப்பினரின் ஆதரவு பெருகி வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட விவேக் ராமசாமியின் பெற்றோர்கள் கேரளாவில் வாழ்ந்து வந்துள்ளனர்.


குடியரசு கட்சியினர் மத்தியில் பெருகும் ஆதரவு:


சமீபத்தில், விவேக் ராமசாமியை உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பாராட்டியிருந்தார். இந்த நிலையில், குடியரசு கட்சியினர் மத்தியில் விவேக் ராமசாமிக்கு ஆதரவு பெருகி வருவது கருத்துக்கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. வெளியான புதிய கருத்துகணிப்பு முடிவுகளின்படி, புளோரிடா மாகாண ஆளுநர் ரான் டிசாண்டிஸ் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் சம பலத்துடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொள்கின்றனர்.


எமர்சன் கல்லூரி எடுத்த கருத்துக் கணிப்பின்படி, டிசாண்டிஸ் மற்றும் ராமசாமி ஆகியோர் தலா 10 சதவிகித ஆதரவுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர். அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், 56 சதவகிதத்தினரின் ஆதரவுடன் முதல் இடத்தில் உள்ளார். கடந்த ஜூன் மாதம் எடுத்த கருத்துக்கணிப்பில் டிசாண்டிஸ்க்கு 21 சதவிகிதத்தினரின் ஆதரவு பதிவாகியிருந்தது.


ஆனால், அது தற்போது, 10 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதற்கு நேர் மாறாக, வெறும் இரண்டு சதவகித ஆதரவுடன் இருந்த விவேக் ராமசாமிக்கு தற்போது 10 சதவிகிதம் ஆதரவுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். டிசாண்டிஸ் ஆதரவாளர்களிடையே சற்று தடுமாற்றம் தெரிவிதாகவும் கருத்துக்கணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 


ராமசாமி ஆதரவாளர்களில் 50 சதவிகிதத்தினர், அவருக்கு கண்டிப்பாக வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர். ஆனால், டிசாண்டிஸ் ஆதரவாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே அவருக்கு கண்டிப்பாக வாக்களிப்போம் என தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், 80 சதவீதத்துக்கும் அதிகமான டிரம்ப் ஆதரவாளர்கள், அவருக்கே நிச்சயம் வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர்.