அமெரிக்காவில் வசிக்கும் இந்தியத் தம்பதிகளான அமித் ஆத்மா மற்றும் அதித்யா மதிராஜூ இருவரும் தாங்கள் கருவூற்றிருப்பதாக தங்கள் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டனர். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவில் வசிக்கும் தன்பால் ஈர்ப்பின தம்பதி, அமித் ஆத்மா மற்றும் ஆதித்யா மதிராஜு கடந்த 2019ம் ஆண்டு இந்து முறைப்படி வெகுவிமரிசையாக திருமணம் செய்து கொண்டனார். பாரம்பரிய முறைப்படி நடந்த இந்த திருமணம் இணையத்தில் வைரலாகி, பெருத்த கவனம் ஈர்த்தது. இந்நிலையில், அவர்கள் நேரடியாக குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர்.
இதையடுத்து, குழந்தையை பெற்றுக்கொள்வதற்கு தேவையான மருத்துவ சிகிச்சை முறை மற்றும் பரிசோதனைகள் தொடர்பாக அறிந்துகொள்ள முயற்சித்தனர். வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றுக்கொள்ளுதல், கருமுட்டையை தானமாக வழங்குதல், ஒரு பெண்ணிடம் இருந்து மற்றொரு பெண்ணுக்கு கருமுட்டை வழங்குதல் என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் கற்றறிந்துள்ளனர். இருவரில் யார் ஒருவர் குழந்தை பெறும் முயற்சியில் நேரடியாக ஈடுபடுவது என்பதையும் முடிவு செய்த அவர்கள், வழக்கமான தம்பதியாக இல்லாமல், தன்பால் ஈர்ப்பின தம்பதியாக குழந்தையை பெறுவது என்பது அதிக செலவை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்துள்ளனர். வாடகை தாய் கிடைத்த பிறகு நான்கு கட்ட பரிசோதனைகளுக்கு பின்பு, குழந்தையை வெற்றிகரமாக பெற்றெடுக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து, அவர்களின் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும், ஸ்கேனிங் புகைப்படங்களை தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதற்கு அன்பும் ஆதரவும் அளித்து பலர் கமெண்ட் செய்தாலும், இந்த தன்பால் உறவை கொச்சைப் படுத்தியும், இந்த உறவில் எப்படி கருவுறுதல் சாத்தியமாகும் என்றும் கேள்வி எழுப்பி பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசியிருக்கும் இந்தத் தம்பதியினர், “இரண்டு நபர்கள் கருத்தரிக்காமல், கருவுறுதல் இந்திய வரலாற்றில் இது முதன்முறை அல்ல. தன்பால் ஈர்ப்பு கொண்ட முக்கியப் பிரபலங்களும், கரு சுமக்காமல் வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் செலப்ரிட்டி ஜோடிகளும் இந்த முறையைத் தேர்ந்தெடுத்து குழந்தை பெற்றுள்ளனர். அதனால் இவ்வாறு குழந்தை பெறுதல் சாத்தியமே. இந்த முறையில் எங்களில் ஒருவரது விந்தணு குழந்தையை பெற உபயோகப்படுத்தப்பட்டதால் உயிரியியல் ரீதியாக குழந்தை எங்களில் ஒருவருடன் தொடர்புடையது, என்றாலும் அது தற்போது முக்கியமல்ல.
நாங்கள் விரும்பும் வகையிலான குடும்பத்தைத் தேர்ந்தெடுக்க எங்களுக்கு முழு உரிமை உண்டு. இதற்காக நாங்கள் இரண்டரை ஆண்டுகள் கடுமையாக போராடினோம். இப்போது எங்களுக்குத் தேவை அன்பு மட்டுமே. அதனால் நாங்கள் விரும்பும் குடும்பத்தை அமைத்துக்கொள்ள வாய்த்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை நாங்கள் பயன்படுத்திக்கொள்கிறோம்.அவ்வளவே” எனக் குறிப்பிட்டுள்ளனர்.