இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவில் வசிக்கும் தன்பால் ஈர்ப்பின தம்பதி, அமித் ஷா மற்றும் ஆதித்யா மதிராஜு கடந்த 2019ம் ஆண்டு இந்து முறைப்படி வெகுவிமரிசையாக திருமணம் செய்து கொண்டனார். பாரம்பரிய முறைப்படி நடந்த இந்த திருமணம் இணையத்தில் வைரலாகி, பெருத்த கவனம் ஈர்த்தது. இந்நிலையில், அவர்கள் நேரடியாக குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர்.
இதையடுத்து, குழந்தையை பெற்றுக்கொள்வதற்கு தேவையான மருத்துவ சிகிச்சை முறை மற்றும் பரிசோதனைகள் தொடர்பாக அறிந்துகொள்ள முயற்சித்தனர். வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றுக்கொள்ளுதல், கருமுட்டையை தானமாக வழங்குதல், ஒரு பெண்ணிடம் இருந்து மற்றொரு பெண்ணுக்கு கருமுட்டை வழங்குதல் என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் கற்றறிந்துள்ளனர். இருவரில் யார் ஒருவர் குழந்தை பெறும் முயற்சியில் நேரடியாக ஈடுபடுவது என்பதையும் முடிவு செய்த அவர்கள், வழக்கமான தம்பதியாக இல்லாமல், தன்பால் ஈர்ப்பின தம்பதியாக குழந்தையை பெறுவது என்பது அதிக செலவை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்துள்ளனர்.
வாடகை தாய் கிடைத்த பிறகு நான்கு கட்ட பரிசோதனைகளுக்கு பின்பு, குழந்தையை வெற்றிகரமாக பெற்றெடுக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து, அவர்களின் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும், ஸ்கேனிங் புகைப்படங்களை தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக பேசியுள்ள ஆதித்யா, ”குழந்தையைப் பெற்றெடுப்பது எங்களது வாழ்வை இன்னும் இயல்பாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஒரே பாலின ஜோடியாக இருந்தாலும் பரவாயில்லை, நீங்கள் விரும்பும் வாழ்க்கையை நீங்கள் வாழலாம்” என்றார். இந்த தம்பதிக்கு தற்போது சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.