வழக்கறிஞர்கள் சங்கத்தேர்தல்:


சென்னை உயர்நீதிமன்றத்தின் பழமையான வழக்கறிஞர் சங்கமான சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்  சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடைசியாக 2016 ம் ஆண்டு தேர்தல் நடந்தது.  2018 ம் ஆண்டு தேர்தல் நடத்த வேண்டியிருந்த நிலையில், சங்க தேர்தல் தொடர்பாக அறிவிப்புக்கும், தேர்தல் புதிய விதிகளுக்கும் எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரபட்டதால்  கடந்த 4 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை. 


வழக்குகள் முடிவுக்கு வந்து, தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலை நடத்த வழக்கறிஞர் கபீரை தேர்தல் அதிகாரியாக நியமித்து உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. தேர்தலில் 4 ஆயிரத்து 696 வழக்கறிஞர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.


125 பேர் போட்டி:


 தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர், 6 மூத்த செயற்குழு உறுப்பினர்கள், 5 இளைய செயற்குழு உறுப்பினர்கள் என 16 பதவிகளுக்கு நடக்க உள்ள இத்தேர்தலில் 125 பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.


தேர்தலில் க்யூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்த பிறகே வாக்காளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஆனால் ஆரம்பத்திலேயே அந்த க்யூ ஆர் கோடு முறையாக வேலை செய்யாததாலும், கல்லூரி மாணவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்ததாலும் ஒருத்தரப்பு வழக்கறிஞர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.


தற்காலிக ரத்து:


இருந்தபோதிலும் தேர்தல் சரியாக 10.40 மணிக்கு மேல் தொடங்கியது. அப்போதே ஒரு தரப்பு வழக்கறிஞர்கள் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் அல்லது தேர்தலை வேறு தேதிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர்.


மேலும் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குச் சீட்டை வெளியே ஒரு தரப்பினர் கொண்டு சென்றதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இந்த நிலையில் தேர்தல் உள்ளே நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் தர்ணாவில் ஈடுபட்டிருந்த வழக்கறிஞர்கள்  சிலர், வாக்குச்சாவடிக்குள்  புகுந்து அங்கே தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்டு இருந்த பொருட்களை அடித்து உடைத்து கீழே தள்ளினர். தொடர்ந்து தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால்,  தேர்தல் அதிகாரி கபீர், தேர்தலை தற்காலிகமாக ரத்து செய்வதாகவும், சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.