சமீப காலமாகவே, வெளிநாடுகளில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில், கனடாவில் இந்திய மாணவர்களுக்கு எதிராக வெறுப்பு குற்றங்கள், மதவெறி வன்முறைகள் ஆகியவை அதிகரித்துள்ளது குறித்து இந்தியா எச்சரித்துள்ளது.
விழிப்புடன் இருக்குமாறு கனடா வாழ் இந்திய மாணவர்களை இந்திய அரசு கேட்டு கொண்டுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெறுப்பு குற்றங்கள், மதவெறி வன்முறை மற்றும் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற சம்பவங்களை கனடாவுடன் எடுத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தக் குற்றங்களைச் செய்த குற்றவாளிகள் இதுவரை கனடாவில் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. விவரிக்கப்பட்டுள்ளபடி குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, கனடாவில் உள்ள இந்தியப் பிரஜைகள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பயணம்/கல்விக்காக கனடாவுக்குச் செல்பவர்கள் தகுந்த எச்சரிக்கையுடன் மற்றும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி வாக்கெடுப்பு நடத்த கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கோரிக்கை விடுத்திருப்பது இந்திய, கனடா நாடுகளுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மத்தியில், வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
காலிஸ்தான் வாக்கெடுப்பு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று பேசுகையில், "இந்த வாக்கெடுப்பு தீவிரவாத சக்திகளின் கேலிக்கூத்து. இது ஒரு நட்பு நாட்டில் அனுமதிக்கப்பட்டது ஆழ்ந்த ஆட்சேபனைக்குரியது" என்றார்.
ஒட்டாவாவில் அல்லது டொராண்டோ அல்லது வான்கூவரில் உள்ள தூதரகங்களில் பதிவு செய்து கொள்ளுமாறு கனடாவில் உள்ள இந்திய பிரஜைகள் மற்றும் மாணவர்களை அரசு வலியுறுத்தியது. "தேவை அல்லது அவசரநிலை ஏற்படும் பட்சத்தில், கனடாவில் உள்ள இந்திய குடிமக்களுடன் தூதரகம் தொடர்பு கொள்ள இது உதவும்" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கனடாவில் 1.6 மில்லியன் இந்திய வம்சாவளியினர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வசிக்கின்றனர். இந்த ஆண்டு, கனடாவில் இந்து கோயில்கள் மீது இரண்டு தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. செப்டம்பர் 15 அன்று, ஒரு கோயில் சிதைக்கப்பட்டது.