இலங்கையில் மீண்டும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 84 பேரை காவல்துறை கைது செய்துள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது.
இலங்கையில் நேற்று (சனிக்கிழமை) அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பினர். மேலும் ஜனநாயக முறைப்படி போராடுபவர்களை, தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொருளாதார நெருக்கடி:
இலங்கையில் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்ற நிலையில், பணவீக்கம் மிகவும் அதிகரித்தது. அதையடுத்து அத்தியாவசியப் பொருட்களான பெட்ரோல், டீசல், காய்கறிகள் உள்ளிட்டவைகளின் விற்பனை விலை பன்மடங்கு அதிகரித்தது. இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் பல்வேறு பகுதிகளில் மக்கள் திரளாக சாலையில் இறங்கி போராட்டட்த்தில் ஈடுபட்டனர். மேலும் அதிபர் மற்றும் பிரதமர் மாளிகையை, மக்கள் கைப்பற்றினர். போராட்டம் வலுவடைந்ததை தொடர்ந்து பிரதமராக பதவி வகித்த மகிந்த ராஜபக்ச பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து, அதிபராக பதவி வகித்த கோத்தபய ராஜபக்ச வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று, அங்கிருந்து பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். ஆனால் அவருக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை அரசின் பொருளாதார நடவடிக்கைக்கும் எதிர்ப்பு தெரிவித்து அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், அரசு கைது செய்து வருவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்து வந்தனர்.
மீண்டும் போராட்டம்:
இந்நிலையில், ஜனநாயக முறைப்படி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை, தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்புவில் பல்வேறு மக்கள், நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீர் பீச்சி அடித்தும் அப்புறப்படுத்த முயன்றனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 84 பேரையும் கைது செய்தனர்.
பாதுகாப்பு அதிகரிப்பு:
போராட்டம் பதற்றம் நீடித்து வரும் நிலையில் பாராளுமன்றம், உயர்நீதிமன்ற வளாகம், அதிபர் செயலகம், அதிபர் மாளிகை, இலங்கை கடற்படை தலைமையகம் மற்றும் காவல் தலைமையகம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தண்ணீர் பீச்சி அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது