கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியாவில் ஞாயிற்றுக்கிழமை அன்று அதன் தலைநகர் மொகடிஷுவின் மேற்கில் ராணுவ தளத்தில் தற்கொலைப் படைத் பயங்கரவாதி ஒருவர் தன்னைத்தானே வெடிக்கச் செய்ததில், ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார். இதில், குறைந்தது ஆறு பேர் காயமடைந்தனர் என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


தற்கொலை படை பயங்கரவாதி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ராணுவ வீரர் போல் வேடமிட்டு ராணுவ தளத்திற்குள் நுழைந்து, ராணுவ வீரர்களோடு ராணுவ வீரர்களாக கலந்து குண்டை வெடிக்க செய்துள்ளார் என ராணுவ தளத்தின் கேப்டன் ஏடன் ஓமர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் பேசுகையில், "ஒரு ராணுவ வீரரை இழந்தோம். பலர் காயமடைந்தனர். ஒரு சோதனைச் சாவடியில் தற்கொலை படை பயங்கரவாதி தன்னைத்தானே வெடிக்கச் செய்தார்" என்றார். மொகடிஷுவில் உள்ள மதீனா மருத்துவமனைக்கு இறந்த சிப்பாயின் உடல் அனுப்பப்பட்டுள்ளது. காயமடைந்த ஆறு பேரும் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என செவிலியர் தெரிவித்துள்ளார்.


தாக்குதலை நடத்தியது யார் என்பது உடனடியாகத் தெரியவில்லை. ஆனால், இஸ்லாமியக் குழுவான அல் ஷபாப் சோமாலியா அமைப்பு, பிற இடங்களில் அடிக்கடி குண்டுவெடிப்புகள், துப்பாக்கித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.


சோமாலியாவில் அரசைக் கவிழ்த்து, இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் அடிப்படையில் தனது சொந்த ஆட்சியை நிறுவ அல் கொய்தா-நேசக் குழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


 






40 ஆண்டுகளில் இல்லாத மோசமான வறட்சியால் சோமாலியாவில் லட்சக்கணக்கான மக்கள் கடுமையான பட்டினியால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சுமார் 4.3 மில்லியன் மக்கள் உணவு, தண்ணீர், இருப்பிடமின்றி தவித்து வருகின்றனர்.


கடந்த சில வருடங்களில் மட்டும் சோமாலியாவில் இரண்டரை லட்சம் பேர் பட்டினியால் மடிந்துள்ளனர். இந்த எண்ணிக்கை கூடுதலாக இருக்கவும் வாய்ப்புண்டு.


சோமாலியாவில், நிலையான அரசு அமையாதது, தொடர்ந்து நடந்து வரும் உள்நாட்டு சண்டைகள், மழையின்மை ஆகியவை கடும் வறட்சிக்கு காரணமாகியுள்ளன. இதில் தெற்கு சோமாலியாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் தான் கடும் வறட்சிக்கு எதிராக சோமாலியா அரசு அவசர நிலையை அறிவித்தது. எனினும் 5 மாதங்கள் கடந்தும் சோமாலியாவில் நிலைமை சீராகவில்லை.