இந்தியாவால் இலங்கைக்கு வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்ட டானியர் விமானத்துடன்
இந்திய கடற்படை துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் எஸ்.என். கோர்மேட் இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். இன்று நடந்த விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரம் சிங்கவிடம் இந்த டோனியர்228 விமானம் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இலங்கை கடற்படையில் இந்த விமானம் சேர்க்கப்பட்டது.


நிகழ்ச்சியில் பேசிய இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே இரு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் நம்பிக்கையை வலுப்படுத்தும் விதமாகவும் ,பரஸ்பர  புரிந்துணர்வை வலுப்படுத்தும் விதமாகவும் இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும் டோனியர்228  விமானம் இலங்கைக்கு பரிசளிக்கப்படுகிறது.


வங்காள விரிகுடா  மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் உள்ள இந்தியாவின் நட்பு நாடுகளின் கரத்தை வலுப்படுத்தும் பொருட்டு ராணுவ ரீதியிலான இத்தகைய உதவிகள் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் சிறந்த பயனைத் தரும் என்பது மறுப்பதற்கு இல்லை.இந்த விமானம் இலங்கை விமானப்படையின் பாதுகாப்பு அம்சங்களை மேலும் வலுப்படுத்த உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.


சீன 'ஆராய்ச்சி' கப்பல் இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நாளை வந்தடையும் என கூறப்படும் நிலையில் ஒரு நாள் முன்னதாக இந்தியாவின் டார்னியர் விமானம் இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.இதனிடையில் நாளை  இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்து சேரும் சீன ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5 வரும் 22 ஆம் தேதி வரை  துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட உள்ளது.


இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திய கடற்படையின் துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் எஸ்.என். கோர்மேட் , கடல்சார் கண்காணிப்பு விமானத்துடன் இலங்கை சென்றார்.
இந்திய சுதந்திர தினமான  15ஆம் தேதி அதாவது இன்று திங்கட்கிழமை
கொழும்பில் நடைபெற்ற விழாவில் இலங்கை கடற்படைக்கு வைஸ் அட்மிரல் கோர்மேட்  மற்றும் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே  இருவரும் விமானத்தை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடம் வழங்கினர்.


இலங்கைக்கு தற்போது தேவையான உடனடி பாதுகாப்பை வழங்கும் பொருட்டும், கடல் சார் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையிலும் இந்திய கடற்படை வசம் இருந்த இந்த டானியர் விமானம் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.இந்த டார்னியர் கடல் சார் கண்காணிப்பு விமானத்தை இயக்குவதற்கு இந்திய கடற்படையால், இலங்கை கடற்படை மற்றும் விமான படை குழுவினருக்கு தொடர் பயிற்சிகள்  வழங்கப்பட்டுள்ளன.இந்தியாவால் அளிக்கப்பட்ட தொடர் பயிற்சிகள் நிறைவடைந்ததை அடுத்த இந்த டார்னியர் விமானம் இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.


இலங்கை இந்தியாவின் முக்கிய பங்காளியாக உள்ளது எனவும் மேலும் வரும்  ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு நடவடிக்கைகள்  தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் எனவும் பெயர் வெளியிட விரும்பாத ஒரு மூத்த அதிகாரி தெரிவித்திருக்கிறார்.


இந்த டார்னியர் கண்காணிப்பு விமானம் கையளிப்பு விழாவில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டது ,  இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய உறவுகளை விரிவுபடுத்துவதற்கான
 வலுவான சமிக்ஞையை அனுப்பும்  என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
  
இந்திய அரசு நடத்தும் ஏரோஸ்பேஸ் நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) தயாரித்த இரண்டு புதிய டோர்னியர் விமானங்களை இந்தியா எதிர்காலத்தில் இலங்கைக்கு வழங்கும் என கூறப்படுகிறது.இந்த இரண்டு புதிய டானியார் ஹெச்ஏஎல் விமானங்கள் ஒப்படைக்கப்பட்டதும், தற்போது இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இந்திய கடற்படையின் பாவனையில் இருந்த டானியர் விமானம்  இந்தியாவுக்கு திரும்ப வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


சீனக் கப்பலான 'யுவான் வாங் 5' செவ்வாய்கிழமை அன்று இலங்கையின் தெற்கு துறைமுகமான  ஹம்பாந்தோட்டையில் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்படும் நிலையில் அதற்கு ஒரு நாள் முன்னதாக, டார்னியர் விமானத்தை இந்தியா இலங்கைக்கு ஒப்படைத்துள்ளது.குறித்த சீன கண்காணிப்பு கப்பலானது முதலில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி துறைமுகத்தை வந்தடைய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இலங்கை அதிகாரிகளின் அனுமதி கிடைக்காததால் தாமதமானது.


இந்த சீன கண்காணிப்பு கப்பலில் வருகை தொடர்பான இந்தியாவின் பாதுகாப்பு அச்சத்துக்கு மத்தியில் இந்த விஜயத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை சீனாவிடம் கோரியுள்ளது. எனினும்  இந்தியா, சீனா இடையேயான பலதரப்பட்ட பேச்சு வார்த்தைகளின் பின்னர் குறித்த கண்காணிப்பு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நாளை வந்தடைய இருக்கிறது.


முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று, குறித்த சீன கண்காணிப்பு கப்பலை ஆகஸ்ட் 16 முதல் 22 வரை
இலங்கை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு   இலங்கை அரசால் அனுமதி வழங்கப்பட்டது.


 இது குறித்து பேசியுள்ள வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, இலங்கை தனது கொள்கைக்கு உட்பட்டு சுதந்திரமான முடிவுகளை எடுக்கும் உரிமை உண்டு எனவும், அதேபோல்  கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு அச்சம் குறித்த கவலைகளை சரி செய்ய இந்தியா நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.