India Canada Issue: இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையிலான பிரச்னையானது நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது.
நிஜ்ஜார் கொலை வழக்கு:
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்கள் வாழும் பகுதியை , தனி நாடாக அறிவிக்க வேண்டும் என காலிஸ்தான் அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். அவ்வப்போது , இந்தியாவுக்கு எதிராக கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து காலிஸ்தான் அமைப்பினர் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
இந்த தருணத்தில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் , சீக்கிய பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் கொலை வழக்கில், இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கு தொடர்பு இல்லை என்றும் அதற்கான ஆதாரம் இருக்கிறதா என்றும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை இந்தியாவின் தலையீடு தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூரவ தகவலையும் கனடா அரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் அமித்ஷா மீது குற்றச்சாட்டு:
நிஜ்ஜார் கொலை தொடர்பான விசாரணையில், கனடாவிற்கான இந்தியாவின் தூதர் சஞ்சய் குமார் வர்மாவின் பெயரை குறிப்பிட்டதற்காக கனடாவை, வெளியுறவு அமைச்சகம் கடுமையாக சாடி குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. அதனை தொடர்ந்தே, கனடாவிற்கான இந்தியாவின் உயர் தூதரக அதிகாரி மற்றும் பிற குற்றம்சாட்டப்பட்ட தூதரக அதிகாரிகளை இந்தியா திரும்பப் பெற முடிவு செய்த நிலையில், கனடா தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. காலிஸ்தான் தீவிரவாதியாக கருதப்படும் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவானது மோசமான நிலைக்கு சென்றுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கனடாவில் உள்ள சீக்கியர்கள் குறித்தான உளவுத்தகவலை சேகரிக்குமாறு, உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டதாக கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மாரிசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா எச்சரிக்கை:
இந்நிலையில், இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளதாவது , “ இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கனடா வைத்துள்ளது. இதுபோன்ற கருத்துக்களுக்கு கனடா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். மேலும் இதுகுறித்து கனடா தூதர் விளக்கமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.