இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளில் இந்தியா சோமாலியா, மடாகாஸ்கருடன் இணைந்துவிடும். மும்பை இருக்கும். ஆனால் அரபிக்கடல் இருக்கவே இருக்காது. இலங்கை என்ற தேசமே இல்லாமல் போய்விடும். திருவனந்தபுரம், கராச்சியுடன் சேர்ந்திருக்கும் என்று ஒரு சுவாரஸ்ய ஆய்வறிக்கை கூறுகிறது.


பூமி சுழல்வது நாம் அனைவரும் அறிந்தே. பூமிக்கு அடியில் இருக்கும் பிளேட் டெக்டானிக்ஸ் எனப்படும் கண்டத்தட்டும் நகர்ந்து கொண்டே இருப்பது நம்மில் பலருக்கும் புரியாத புவியியல்.  நிலநடுக்கம், எரிமலை நிகழ்வுகள், மலைகள் உருவாக்கம், கடற் பள்ளங்கள் என்பன தட்டுக்களின் எல்லைகளை அண்டியே ஏற்படுகின்றன. கண்டத் தட்டுகள் இவ்வகையான சார்பு இயக்கம் மூலம் வருடத்திற்கு கிட்டத்தட்ட சுழியத்திலிருந்து 100 மி.மீ வரை நகர்கின்றன.


இப்படியே நகர்வதால் இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளில் இந்தியாவின் மேற்குப் பகுதி, ஆப்பிரிக்கக் கண்டத்துடன் மோதும்.


அப்போது இந்தியா, சோமாலியா மற்றும் மடாகாஸ்கர் நாடுகளுடன் மோதி இணையும் என்று புதிய ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளன.


டெக்டானிக் பிளேட்ஸ் அசைவுகள் குறித்த ஆய்வில் தான் இது தெரியவந்துள்ளது. மேலும் 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் அரபிக்கடலே இருக்காது என்றும் கூறப்படுகிறது. 


கண்டப் பெயர்ச்சி என்றால் என்ன?


1912 - கண்டப் பெயர்ச்சி பற்றிய தனது கருத்துகளை முதன்முறையாக ஆல்ப்ரெட் வேகனர் என்ற ஜெர்மானிய ஆய்வாளர், ஃப்ராங்க்ஃபர்ட்டில் வெளியிட்டார். புவியின் நிலப்பரப்பு அனைத்தும் ஒன்றாக இணைந்திருந்து, பின்னாளில் கண்டங்களாகப் பிரிந்தன என்ற கோட்பாடு கண்டப் பெயர்ச்சி என்றழைக்கப்படுகிறது. முதல் நவீன அட்லசை உருவாக்கியவராகக் குறிப்பிடப்படும் ஆப்ரஹாம் ஆர்ட்டெலியஸ் என்ற நெதர்லாந்துக்காரர், 1596இலேயே இக்கருத்தைக் கூறியிருந்தார். அதேபோல் தான் இப்போது பிரிந்திருக்கும் கண்டங்கள் டெக்டானிக் பிளேட்ஸ் அசைவுகளால் சேரப்போகின்றன. இயற்கை தான் எத்தனை அதிசயமானது?


மும்பைக்கு என்னவாகும்?


இந்தியாவின் மேற்கு பகுதி ஆப்ரிக்காவுடன் இணையும் என்றால் மும்பைக்கு பிரச்சினை இருக்காது. ஆனால் அரபிக்கடல் இருக்காது எனக் கூறுகிறது அந்த ஆய்வு. மும்பையும் அப்ரிக்காவின் மொகாதிசுவும் இணைந்துவிடும். அதேபோல் கொல்கத்தாவும் மொரீசியஸும் இணைந்துவிடும். இப்போது இருக்கும் இலங்கை இல்லாமேலேயே அழிந்துவிடும்.


இந்த ஆய்வறிக்கை அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் சயின்ஸில் வெளியாகியுள்ளது. உட்ரெக்ட் பல்கலைக்கழகத்தின் ஜியாலஜிஸ்ட் பேராசிரியர் டோ வேன் ஹின்ஸ்பெர்கென் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.



ஹார்ன் ஆஃப் ஆப்பிரிக்கா தென்மேற்கு இந்தியாவுடன் இணைந்து பெரிய மலைப்பிரதேசமாகிவிடும்.
இதையெல்லாம் பார்க்க நாம் நிச்சயமாக இருக்க மாட்டோம். ஆனால் மேற்குப்பகுதி இல்லாத இந்தியாவை உங்களால் யோசிக்க முடிகிறதா? அதேபோல் திருவனந்தபுரம், பாகிஸ்தானின் கராச்சியுடன் சேர்ந்திருக்கும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. உங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள்.