மியான்மர் கடும் புயலால் பாதிக்கப்பட்ட நிலையில், நெருக்கடியான சூழலில் அவர்களுக்கு உதவி புரிந்துள்ளது இந்திய கடற்படை.


மியான்மரில் புயல் பாதிப்பு:


உலக நாடுகள் மீது காலநிலை மாற்றம் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிக அளவில் மழை பெய்வதற்கும், வெள்ளம் ஏற்படுவதற்கும், இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதற்கும், காலநிலை மாற்றமே காரணம் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.


கடந்தாண்டு, இதுவரை சந்திக்காத காலநிலை பிரச்னைகளை உலக நாடுகள் சந்தித்தது. அதன் உச்சத்தை எட்டியது கூட சொல்லலாம். இதை கட்டுப்படுத்த வளர்ந்த நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.


இதற்கிடையே, மியான்மரில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பாதிப்புகள் அந்நாட்டை நிலைகுலைய செய்தது. இந்த நிலையில், மியான்மரில் நிவாரணம் வழங்க இந்திய கடற்படை மனிதாபிமான உதவிகளை விரைந்து மேற்கொள்ள தயாரிப்புப் பணிகளை தொடங்கின.


உதவி செய்த இந்திய கடற்படை:


தெற்கு சீன கடற்பகுதியில் உருவான யாகி புயலின் தாக்கம் மியான்மரின் பல பகுதிகளில் கடுமையாக இருந்தது. இதையடுத்து குடிநீர், மருந்துப்பொருட்கள், உணவுப்பொருட்கள் போன்றவற்றை ஏற்றிக்கொண்டு ஐஎன்எச்எஸ் கல்யாணி கப்பல் விசாகப்பட்டடினத்தில் இருந்து யாங்கூனுக்கு புறப்பட்டுச் சென்றது.


குறுகிய அவகாசம் இருந்தபோதிலும் விரைவான செயல்பாடு, இந்த பிராந்தியத்தில் மனிதாபிமான நெருக்கடி ஏற்படும் போது கடற்படையின் பணித்திறனை வெளிப்படுத்துவதாக இருந்தது. மியான்மர் மட்டும் இன்றி இயற்கை பேரிடர், நெருக்கடியான காலக்கட்டத்தில் பாதிக்கப்பட்ட பல நாடுகளுக்கு இந்தியா உதவி புரிந்துள்ளது.


கடந்த 2022ஆம் ஆண்டு, இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, ​​4 ஆயிரத்திற்கும் அதிகமான அமெரிக்க டாலர்களை வழங்கி இலங்கைக்கு இந்தியா உதவி செய்தது. இது, இலங்கைக்கு சர்வதேச நிதியம் அளித்ததை விட அதிகம்.


அடுத்த 5 ஆண்டுகளில் பூடானுக்கு இந்தியா ரூ.10,000 கோடி நிதியுதவி அளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி இந்தாண்டு தொடக்கத்தில் அறிவித்தார். உறவில் விரிசல் ஏற்பட்டபோதிலும், கடனால் தத்தளித்து வரும் மாலத்தீவுகளுக்கு நிதி உதவி வழங்க இந்தியா தயாராக இருப்பதாக கடந்த சில நாடுகளுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.