2013-17 வரை இந்தியா அதன் ஆயுத இறக்குமதியில் 11 சதவீதம் சரிவு இருந்தபோதிலும், 2018 ஆம் ஆண்டு முதல் உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா இருந்து வருகிறது.


ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) சமீபத்திய அறிக்கையின்படி, 2013-17 மற்றும் 2018-22 க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஆயுத சப்ளையர் ரஷ்யா என்பதைக் காட்டுகிறது. ஆனால் இந்தியாவுக்கான ஆயுத இறக்குமதியில் அதன் பங்கு 64 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் பிரான்ஸ் இரண்டாவது பெரிய ஆயுத சப்ளையராக உருவெடுத்துள்ளது. 2018-22 க்கு இடையில் இந்தியாவிற்கு 29 சதவிகிதம் ஆயுதம் பிரான்ஸிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது, அமெரிக்காவிலிருந்து  11 சதவிகிதம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.


பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான இந்தியாவின் உறவின் காரணமாக ஆயுத இறக்குமதிக்கான தேவையை அதிகரித்துள்ளது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  மேலும், மொத்த உலகளாவிய ஆயுத இறக்குமதியில் 11 சதவீத பங்கைக் கொண்டு, இந்தியா 2018 ஆண்டிலிருந்து உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இருந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும், ஆயுத இறக்குமதியில் 11 சதவீத வீழ்ச்சிக்கு இந்தியாவின் ஆயுதக் கொள்முதல் செயல்முறை மற்றும் அதன் ஆயுத இறக்குமதியாளர்களை வகைப்படுத்துவதற்கான முயற்சிகள் உள்ளிட்ட பல காரணிகள் காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.


ரஷ்யா மற்றும் பிரான்ஸ் தவிர, உலக அளவில் ஆயுத ஏற்றுமதியில் முதலிடத்தில் இருக்கும் இஸ்ரேல், தென் கொரியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிடமிருந்தும் இந்த ஐந்தாண்டு காலத்தில் இந்தியா ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ளது.  மற்ற இறக்குமதியாளரின் வலுவான போட்டி, இந்திய ஆயுத உற்பத்தி அதிகரிப்பு மற்றும் 2022 முதல் உக்ரைன் மீதான படையெடுப்பு ஆகியவை இந்தியாவின் முக்கிய ஆயுத இறக்குமதியாளரான ரஷ்யாவை நெருக்கடியான சூழலில் தள்ளியுள்ளது.


2018-22ல் ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்கு இந்தியா (31%), சீனா (23%) மற்றும் எகிப்துக்கு (9.3%) சென்றது. இரண்டு காலகட்டங்களுக்கு இடையே ரஷ்ய ஆயுத ஏற்றுமதி 37 சதவீதம் குறைந்தாலும், சீனா மற்றும் எகிப்துக்கான ஏற்றுமதி முறையே 39 சதவீதம் மற்றும் 44 சதவீதமாக அதிகரித்துள்ளது. பிரான்சில் இருந்து இந்தியாவின் ஆயுத இறக்குமதியில் 62 போர் விமானங்கள் மற்றும் நான்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது, 2013-17 மற்றும் 2018-22 க்கு இடையில் 489 சதவீதம் அதிகம் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி பிரான்ஸ் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. 


ரஷ்யா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா மியான்மருக்கு மூன்றாவது பெரிய ஆயுத சப்ளையராக இருந்து வருகிறது, அதன் இறக்குமதியில் 14 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது.  ஆயுத இறக்குமதியில் இந்தியாவைத் தொடர்ந்து சவுதி அரேபியா (9.6%), கத்தார் (6.4%), ஆஸ்திரேலியா (4.7%), சீனா (4.6%), எகிப்து (4.5%), தென் கொரியா (3.7%), பாகிஸ்தான் (3.7%) ஆகிய நாடுகள் முதலிடத்தில் உள்ளன. இந்த பட்டியலில் 8வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் சுமார் 77% சீனாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கியுள்ளது இந்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது.