மார்க்சியத்தின் தந்தை என்று அழைக்கப்படும் கார்ல் மார்க்ஸின் 140வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கம்யூனிஸ சித்தாந்தத்தைக் கண்டுபிடித்தவர் என அரசியல் அறிமுகம் இல்லாதவர்களால் தவறாக அடையாளப்படுத்தப்பட்டவர். ஆனால் கம்யூனிஸத்தின் ஒரு அங்கமான மார்க்சியத்தை அதன் கொள்கைகளை வரையறுத்தவர் அவர்.


தொழில் உற்பத்தி, உழைப்பு, ஓய்வு மற்றும் வாழ்தலுக்கான பொருளாதாரம் தொடர்பான அவரது எழுத்துகள் பல்வேறு பொருளாதார வரையறைகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தன எனலாம்.  


தொழிலாளர்களின் புரட்சி மற்றும் எதிர்ப்பினால் மட்டுமே முதலாளித்துவம் வீழ்த்தப்படும் என்பதை மிகவும் தீவிரமாக அவர் நம்பினார்.அவரது கொள்கைகள் தவிர்த்து அவரைப் பற்றி தெரியாத பல தகவல்கள் உள்ளன.


Personal is political என்னும் கொள்கைகான முன்னோடியாக அவரது வாழ்க்கை இருந்தது. அவருடைய ஞானஸ்நானம் ஒரு அரசியல் பிரசாரமாக இருந்தது. ஞானஸ்நானம் என்பது பல கலாச்சாரங்களில் அத்தியாவசியமான ஒரு சடங்கு ஆனால் அவரது ஞானஸ்நானத்துக்கு பின்னால் பெரும் அரசியல் காரணம் இருந்தது. 1816 ஆம் ஆண்டில் யூதர்கள் அரசுத்துறை அலுவலகங்களில் பணியாற்றுவதைத் தடுக்கும் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது தந்தை லூதரியனிசம் என்னும் மதத்துக்கு மாறினார். இதில் மார்க்ஸுக்கும் ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டது.


முதலாளித்துவ உலகில் ஓய்வு என்பது ஒரு பண்டம் என்ற கருத்தை ஊக்குவித்தவர் மார்க்ஸ்.


அதே வேளையில், மார்க்ஸ் தனது சிந்தனைகளை எழுதும்போது ஒரு கிளாஸ் பீர் எப்போதும் அவருக்கு அருகில் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.


ட்ரையர் டேவர்ன் கிளப் என்னும் ஒரு கிளப்பில் தன்னை இணைத்துக்கொண்ட பிறகு, மார்க்ஸ் அதிகமாக மது அருந்தத் தொடங்கியதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது வாழ்க்கையான நோய்கள் நிறைந்த வாழ்க்கையாக இருந்தது. மார்க்ஸுக்கு தலைவலி, கண் வீக்கம், மூட்டு வலி, தூக்கமின்மை, கல்லீரல் மற்றும் பித்தப்பை பிரச்சனைகள் மற்றும் மனச்சோர்வு ஆகிய பாதிப்புகள் இருந்தன.


அவரது இணையர் ஜென்னி மிகப்பெரிய செல்வந்தர், இருந்தாலும் இடதுசாரி சித்தாந்தத்தில் ஆர்வம் உடைய ஒரு அரசியல் ஆர்வலராக இருந்தார். மார்க்ஸை விட நான்கு வயது மூத்தவர். இவர்களின் திருமணம் அந்நாளில் மிகவும் சர்ச்சைக்குரியதாகக் கருதப்பட்டது. 


கம்யூனிஸ்ட் அறிக்கையையும், "உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்" போன்ற புரட்சிகர எழுத்துகளையும் எழுதிய அதே காரல் மார்க்ஸ் ஒரு கவிஞர் எனச் சொன்னால் நம்ப முடிகிறதா?. அவரது இணையர் ஜென்னியை காதலிக்கும்போது அவருக்காகப் பல காதல் கவிதைகளை அவர் எழுதினார். மேலும் ஸ்கார்பியன் மற்றும் பெலிக்ஸ் என்ற பெயரில் அவரது தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து ஒரு பகடி நாவலையும் அவர் எழுதினார்.