மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை காலவரையின்றி இந்திய அரசு நீட்டித்துள்ளது
ஏற்றுமதிக்கு தடை
இந்திய நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வெங்காயம் மீதான அதன் ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாட்டை காலவரையின்றி இந்திய அரசாங்கம் நீட்டித்துள்ளது. இது வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைக்கவும், சில சமயங்களில் விலை குறையவும், சில வெளிநாட்டு சந்தைகளில் விலையை அதிகப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய காய்கறி ஏற்றுமதியாளர்களில் ஒரு நாடாக இந்தியா உள்ளது. வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், இந்திய அரசாங்கம் கடந்த டிசம்பர் மாதம் முதல் மார்ச் 31 வரை ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இதையடுத்து, மார்ச் 31 ஆம் தேதியுடன் விதிக்கப்பட்ட தடை காலாவதியாக இருந்தது.
இந்நிலையில் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதில் இருந்து உள்ளூர் விலை பாதியாக குறைந்தது. மேலும், இந்த சீசனில் வெங்காயம் விளைச்சலும் உள்ளதால், இந்தத் தடை நீக்கப்படும் என்று வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையானது, மறு அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை தொடரும் என்று இந்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
விவசாயிகள் கவலை:
இதனால் புதிய பருவப் பயிரிலிருந்து அதிகரித்து வரும் விளைச்சலால், பொருட்களின் விலை வீழ்ச்சி மேலும் ஏற்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த சூழலில், ஏற்றுமதிக்கு தடை நீட்டிப்பு ஆச்சரியமளிக்கிறது மற்றும் முற்றிலும் தேவையற்றது" ஏற்றுமதியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அதிக அளவு வெங்காயம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் உள்ள மொத்த சந்தைகளில், டிசம்பர் மாதத்தில் 100 கிலோவுக்கு வெங்காயத்தின் விலை 4,500 ரூபாயிலிருந்து 1,200 ரூபாயாக குறைந்துள்ளது. மக்களவை தேர்தலானது ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் ஏற்றுமதிக்கு தடை நீக்கினால் வெங்காய ஏற்றுமதி அதிகாமகும். இதன் விளைவாக விலை அதிகரிக்கும். இது விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் என கூறப்படுகிறது.
ஆனால் விலை உயர்ந்தால் அரசுக்கு எதிர்மறை விமர்சனங்கள் எழும் என்று ஆளும் அரசு நினைப்பதால் தடையை நீக்கவில்லை என்று கருத்துகள் எழுந்து வருகிறது. மேலும், தடை நீட்டிப்பால் இந்திய விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
உலகளவில் தாக்கம்:
பங்களாதேஷ், மலேசியா, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் இந்தியாவில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்கின்றன. இந்நிலையில், ஏற்றுமதிக்கான தடை நீட்டிப்பால் இறக்குமதியை நம்பியுள்ள நாடுகளில் விலைவாசி ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உள்ளது .