நிலவின் மூலமாக வானியலில் மிகவும் அற்புத நிகழ்வாக பார்க்கப்படும் சந்திர கிரகணம் நாளை ஏற்படவுள்ளது.
சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்வதற்கு முன்னர் சந்திரன் குறித்து சுருக்கமாக தெரிந்து கொள்வோம்
சூரிய குடும்பம்:
நமது சூரிய குடும்பத்தில் பூமி உள்ளிட்ட 8 கோள்கள் உள்ளன. பூமி உள்ளிட்ட 8 கோள்களும் சூரியனை சுற்றி வருகின்றன. இந்நிலையில் ஒவ்வொரு கோளும், சூரியனை சுற்றி வரும் போது, பூமிக்கு அருகில் வரும்போது, அதை தொலைநோக்கியின் வழியாக காணலாம். நமது பூமிக்கு அருகில் உள்ள செவ்வாய் மற்றும் வெள்ளி கோளை சில நேரங்களில் வெறும் கண்களால் கூட பார்க்க இயலும். ஆகையால் , வானியல் நிகழ்வை, நமக்கு பார்க்கவே ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியும் உண்டாகும்.
பூமிக்கு ஒரு துணைக்கோள் உள்ளது. அதுதான், இரவில் குளிர்ச்சியான ஒளியை தரும் நிலவு. நிலவானது சந்திரன், திங்கள் உள்ளிட்ட பல பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறது. பூமி, சூரியனை சுற்றி வருவது போல நிலவானது பூமியை சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது.
சந்திரன்:
இந்நிலையில் சந்திரனின் பல நிகழ்வுகள் பூமியில் பெரும் பல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அமாவாசை, பௌர்ணமி, ஓதங்கள், கடலலைகள் அதிகரிப்பது உள்ளிட்ட நிகழ்வுகளை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகிய மூன்றின் அமைவுகளால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அதாவது, சூரியனின் ஒளி சந்திரன் மீது படாமல் பூமி மறைத்துக் கொள்கிறது. அதனால் நிலவின் மீது சூரிய ஒளி படுவதில்லை. இதனால் நிலவு நமக்கு தெரிவதில்லை, இந்த நிகழ்வைத்தான் சந்திர கிரகணம் என்று அழைக்கிறோம். கிரகணம் என்றால் இருள் அல்லது மறைந்துள்ளது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
கிரகணம்:எப்போது?; எங்கு?
படம்: சந்திர கிரகணம் தோன்றும் படிநிலை:
இந்நிலையில் நாளை சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமையும் நிகழ்வு ஏற்படுகிறது. நிலவின் மீது படும் ஒளியை பூமியானது மறைப்பதால், நாளை சில மணி நேரங்களுக்கு நிலவின் ஒளி பூமியில் தெரியாது.
சரி, இந்த நிகழ்வை யாரெல்லாம் காணலாம் தெரியுமா?. இந்த நிகழ்வானது நாளை காலை 10.24 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை நிகழும் என ஸ்பேஸ் டாட் காம் என்னும் வலைதளம் தெரிவித்துள்ளது.
ஆகையால், இந்த நிகழ்வு, இந்திய நேரப்படி பகலில் நிகழ்வதால் இந்தியாவில் தெரியாது. ஏனென்றால், பகலில் நிலவின் ஒளியை விட சூரிய ஒளி தாக்கம் அதிகம் இருப்பதால் நிலவு நமக்கு தெரிவதில்லை. ஆனால், இந்த தருணங்களில் இரவு பொழுது உள்ள நாடுகளில் சந்திர கிரகணத்தை காணலாம். வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள மக்கள் இதை கண்டு ரசிக்கலாம். ஆகையால், நேரடியாக காண இயலாதவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அமெரிக்காவில் இருந்தால், புகைப்படங்களை அனுப்ப சொல்லி பார்த்து மகிழுங்கள் அல்லது ஏபிபி நாடு தளத்தின் மூலமாகவும் கண்டு ரசிக்கலாம்.
இனி, அடுத்த சந்திர கிரகணம் எப்பொழுது என்பது குறித்து நாசா விண்வெளி நிலையம் தெரிவிக்கையில்,” இந்த வருடம் செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி நிகழும் என தெரிவித்துள்ளது.