76ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், அண்டை நாடான மடகாஸ்கருக்கு இந்தியா 15 ஆயிரம் சைக்கிள்களை இலவசமாக வழங்கியுள்ளது. விடுதலையின் அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக இந்த சைக்கிள்கள் மடகாஸ்கருக்கு வழங்கப்பட்டுள்ளன.


உலகின் நான்காவது மிகப்பெரும் தீவு


மடகாஸ்கர்  என்பது ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலிலுள்ள ஒரு தீவு நாடு ஆகும். இந்நாட்டின் அதிகாரப்பூர்வ பெயர் மடகாஸ்கர் குடியரசு (Republic of Madagascar). இத்தீவு உலகிலேயே நான்காவது மிகப்பெரிய தீவு ஆகும். மடகாஸ்கர் உயிரியற் பல்வகைமை கூடிய நாடாகும். உலகிலுள்ள தாவர மற்றும் விலங்கு வகைகளில் ஐந்து சதவீதமானவை இத்தீவில் தான் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 


இத்தீவில் உள்ள விலங்குகளும் மரம், செடி கொடிகளும் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவை. அவற்றுள் சுமார் 80% உலகில் வேறு எங்கும் காண இயலாதவை. குறிப்பாக பாவோபாப் மரங்களும், மனிதர்கள்,கொரில்லா, சிம்ப்பன்சி, ஒராங்குட்டான் முதலியன சேர்ந்த முதனி எனப்படும் தலையாய உயிரினத்தைச் சேர்ந்த லெமூர் என்னும் இனம் சிறப்பாக இங்கே காணப்படுகிறது. 


இங்கே பேசப்படும் மொழி மலகாசி (mal-gazh) என்பதாகும். இது மலாய், இந்தோனேசிய மொழிகள் அடங்கிய ஆஸ்ட்ரோனேசிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.


மடகாஸ்கரின் வரலாறு கி.பி. ஏழாவது நூற்றாண்டில் எழுத்தில் தொடங்குகிறது. அரேபியர்கள் தான் முதல் முதலாக இங்கே தங்கள் வாணிபத்திற்காக ஓர் இடத்தைத் தொடங்கினர். ஐரோப்பியர்களின் வருகை 1500இல் தொடங்குகிறது. இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த காப்டன் டியேகோ என்னும் போர்சுகீசிய மாலுமி தன்னுடைய கப்பலில் இருந்து பிரிய நேர்ந்த பொழுது இந்தத் தீவைக் கண்டார். 17ஆம் நூறாண்டில் பிரெஞ்சுக்காரர்களும் பின்னர் பலரும் வாணிபத்திற்காக இங்கே தங்க நேர்ந்தது.


சைக்கிளில் சவாரி செய்த பிரதமர்


இந்நிலையில் இந்த தீவு தேசத்திற்கு சைக்கிள்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது தொடர்பாக இந்தியத் தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் முன்னதாக பதிவிட்டுள்ளது.


மேலும், அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டியன் ஸேயும் மடகாஸ்கருக்கான இந்தியத் தூதர் அபய் குமாரும் இந்த சைக்கிள்களில் பயணம் செய்துள்ள வீடியோ முன்னதாக வெளியாகியுள்ளது.