மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அந்நாட்டுத் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


ஆட்சியைக் கலைத்த ராணுவம்


மியான்மரில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி வெற்றிபெற்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.


50 ஆண்டு கால ராணுவ ஆட்சிக்குப் பிறகு 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி தொடர்ந்து 2020ஆம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்றது.


ஆனால் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நம்பகத்தன்மை இல்லை எனக் கூறி ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு அந்நாட்டு ராணுவம் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. முந்தைய காலங்களில் வீட்டுச் சிறையில் இருந்த சூகி மீண்டும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்.


 






ஊழல் குற்றச்சாட்டுகள், 6 ஆண்டு சிறை


இந்நிலையில், ஊழல் குற்றவழக்குகளில் ஆங் சான் சூகி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து சிறை தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு நீதிமன்றம் முன்னதாகத் தெரிவித்துள்ளது.


சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதற்காக அவர் நிறுவிய நிறுவனமான Daw Khin Kyi Foundationஇல் இருந்து வீடு கட்டுவதற்கு பணம் செலவழித்து ஊழல் செய்ததாகவும், அரசுக்கு சொந்தமான நிலத்தை தள்ளுபடி விலையில் குத்தகைக்கு எடுத்தததாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.


இந்நிலையில், முன்னதாக தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அபத்தமானவை என சூகி மறுத்துள்ளார்.


வன்முறையைக் கட்டவிழ்க்கும் ராணுவம்


தற்போது மியான்மர் தலைநகர் நய்பிடாவில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூகி ஏற்கெனவே பிற வழக்குகளில் 11 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.


மியான்மரில் ராணுவம் ஆட்சியமைத்த பின்னர் பல்லாயிரக்கணக்கான மக்கள் சித்திரவதை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பலர் மீது வன்முறை கட்டவிழ்க்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் இவை என ஐக்கிய நாடுகள் சபை விமர்சித்துள்ளது.


அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூகி ஊழல் முதல் தேர்தல் விதிமீறல்கள் வரை இதுவரை 18 குற்றச்சாட்டுகளுக்கும் மேல் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் அதிகபட்ச தண்டனைக்காலம் 190 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண