தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியான நடவடிக்கையை எடுக்கும் வரை, பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப்பிற்கு இந்தியா இந்த பதிலை கொடுத்துள்ளது. அது குறித்து பார்க்கலாம்.

தீவிரவாதத்திற்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர்

காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ‘ஆபரேஷன் சிந்தூர்‘ என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.

இதற்கு எதிர்வினையாற்றிய பாகிஸ்தான், எல்லைப் பகுதியில், பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதற்கும் இந்தியா பதிலடி கொடுத்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தாக்குதல் நிறுத்தப்பட்டது.

எனினும், இந்த தாக்குதல் நிறுத்தம் தற்காலிகமானதுதான் என்றும், முப்படைகளும் எந்த நேரமும் தயாராகவே இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். இனி இந்தியாவிற்கு எதிரான எந்த ஒரு தீவிரவாத நடவடிக்கையும் போராகவே கருதப்படும் என்றும், இந்தியா உடனடியாக பதிலடி கொடுக்கும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் மோடி.

நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதால் பேச்சுவார்த்தைக்கு கதறும் பாகிஸ்தான்

இந்த நிலையில், ஆயுத தாக்குதலைவிட, பாகிஸ்தானிற்கு செல்லும் நீரை நிறுத்தும் வகையில், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துததான் தரமான பதிலடியாக கருதப்படுகிறது. இதனால்தான், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப், இந்தியாவிடம் அமைதிப் பேச்சுவாத்தை நடத்த வேண்டும் என கதறி அழுது கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே இந்தியாவிற்கு பல தூதுகளை விட்ட நிலையில், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடந்தால், அது காஷ்மீர் விவகாரமாக மட்டும்தான் இருக்கும் என இந்தியா கெத்து காட்டிவிட்டது. இதனால் ஆடிப்போன பாகிஸ்தான், தற்போது பல்வேறு நாடுகளிடம் உதவிகளை கேட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் ஈரான் நாட்டிற்கு சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷரிஃப், அங்கு டெஹ்ரானில், ஈரான் அதிபர் மசூத் பெஷஸ்கியனை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியா பாகிஸ்தானின் தீவிரவாத நிலைகளின் மீது நடத்திய தாக்குதல் பற்றி பேசியுள்ளார்.

பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார் ஷெபாஷ் ஷரிஃப். காஷ்மீர் உள்ளிட்ட நீண்டகால பிரச்னைகள், நீர் பகிர்வு, வர்த்தகம் ஆகியவற்றுக்கு தீர்வு காணவும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். அதில் கவனிக்கவேண்டிய விஷயமாக அவர் கூறியது, தண்ணீர் பகிர்வில் அமைதியான தீர்வு காண்பதற்காகவே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் என்பதுதான்.

ஷெபாஷ் ஷரிஃபிற்கு இந்தியா திட்டவட்ட பதில்

இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமரின் அழைப்பிற்கு இந்தியா என்ன பதில் தரப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. தற்போது அதற்கான இந்தியா பதிலளித்துள்ளது.

ஆம், தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியான மற்றும் பயனுள்ள நடவடிக்கையை பாகிஸ்தான் எடுத்தால் மட்டுமே, சிந்து நதிநீர் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இந்தியா உறுதிபட தெரிவித்துள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் அளித்துவரும் ஆதரவை, நம்பத்தகுந்த மற்றும் திரும்பப்பெறமுடியாத வகையில் கைவிடும் வரை, பேச்சுவார்த்தை நடைபெறாது என்று இந்தியா திட்டவட்டமாக கூறியுள்ளது.

பேச்சுவார்த்தை என்பது இரு தரப்பிற்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றும், தீவிரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடைபெற முடியாது என்றும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், சில வருடங்களுக்கு முன் பாகிஸ்தானிடம் அளிக்கப்பட்ட முக்கிய தீவிரவாதிகளின் பட்டியல் மற்றும் அது  குறித்த கோப்புகளை இந்தியாவிடம் திருப்பி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதோடு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீரின் பகுதியை காலி செய்து இந்தியாவிடம் ஒப்படைத்தால் மட்டுமே, காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தானிடம் பேச முடியும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.