டிசம்பர் மாத்தின் தொடக்கத்தில் ராணுவ திரும்பபெறும் நடவடிக்கைக்கு முன்பாக, அருணாச்சல பிரதேசத்தில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கிடையே மோதல் வெடித்தது.
இந்தியா - சீனா மோதல்:
டிசம்பர் 9ஆம் தேதி நடந்த மோதலில் இரு தரப்பு ராணுவ வீரர்களுக்கும் சிறிய காயம் ஏற்பட்டதாகவும் அதற்கு பின்னர், அப்பகுதியிலிருந்து இர தரப்பு வீரர்களும் பின்வாங்கியிருப்பதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. அருணாச்சல பிரதேசத்தில் தவாங் பகுதியில் இந்த மோதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தவாங்கில் நடந்த மோதல் இந்திய, சீன நாடுகளுக்கிடையே தொடர் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், சீனா முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது.
இணைந்து பணியாற்றத் தயார்:
நிலையான, உறுதியான உறவை வளர்ப்பதன் மூலம் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இன்று தெரிவித்துள்ளார். இந்திய, சீன உறவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ராஜதந்திர ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் சீனாவும் இந்தியாவும் தொடர்பைப் பேணி வருகின்றன. மேலும் இரு நாடுகளும் எல்லைப் பகுதிகளில் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்த உறுதிபூண்டுள்ளன. சீனா-இந்தியா உறவுகளின் நிலையான மற்றும் உறுதியான வளர்ச்சியை நோக்கி இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.
இந்திய, சீன வீரர்கள் மோதி கொண்டதையடுத்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "டிசம்பர் 20 அன்று சீன எல்லை பகுதியில் உள்ள சுஷுல்-மோல்டோவில் இரு தரப்பு கமாண்டர் நிலைக் கூட்டத்தின் 17ஆவது ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
மேற்கு பகுதியில் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் மேற்கொள்ள ஒப்புக்கொண்டது. இந்த இடைபட்ட காலத்தில், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேண இரு தரப்பும் ஒப்புக்கொண்டது" எனக் குறிப்பிடப்பட்டது.
இதுதொடர்பாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தனர்.
இந்திய ராணுவம் குவிப்பு:
முன்னதாக, விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் , "இந்திய - சீன எல்லையான உண்மையான கட்டுப்பாட்டு கோட்டின் தற்போதைய நிலையை சீனா தன்னிச்சையாக மாற்றி அமைக்க இந்திய ராணுவம் அனுமதிக்காது.
இதுவரை இல்லாத அளவுக்கு சீன எல்லையில் இந்தியா ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. 2020 முதல் குவிக்கப்பட்டு வரும் சீன ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்றார்.