இந்தியாவை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) நிரந்தர உறுப்பினர் ஆக பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆதரவு தெரிவித்துள்ளார். 


ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் ஆறு உறுப்பு அமைப்புகளில் ஒன்றாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் விளங்குகிறது. கடந்த 1945ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, உலக நாடுகள் மத்தியில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. 


ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் என்றால் என்ன?


முன்னதாக, லீக் ஆஃப் நேஷன்ஸ் என்ற பெயரில் இருந்த இந்த அமைப்பு செயல்பட்டு வந்தது. ஆனால், உலக அமைதியை நிலைநிறுத்துவதில் தோல்வி அடைந்ததால் இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் ஐநா பாதுகாப்பு கவுன்சில் என்ற பெயரில் புதிய அமைப்பு நிறுவப்பட்டது.


சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதன் மூலம் உறுப்பு நாடுகளுக்கு இடையே இணக்கமான உறவுகளை மேம்படுத்த இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களாக அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, சீனா ஆகிய நாடுகள் இருக்கின்றன.


அல்பேனியா, பிரேசில், காபோன், கானா, இந்தியா, அயர்லாந்து, கென்யா, மெக்சிகோ, நார்வே, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக உள்ளனர். இதில், நிரந்தர பிரதிநிதியாக ஆக இந்தியா தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 


நிரந்தர உறுப்பினராகுமா இந்தியா?


இதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மரும் ஆதரவு தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் 79ஆவது அமர்வில் உரையாற்றிய ஸ்டார்மர், "UNSC அதிக பிரதிநிதித்துவம் வாய்ந்த அமைப்பாக மாற வேண்டும்.


கவுன்சிலில் ஆப்பிரிக்காவுக்கு என நிரந்தர உறுப்பினர்கள் இருப்பதை காண விரும்புகிறோம். பிரேசில், இந்தியா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகியவை நிரந்தர உறுப்பினர்களாக வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் அதிக இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்" என்றார்.


பாதுகாப்பு கவுன்சிலில் முன்னதாக உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், "பாதுகாப்பு கவுன்சில் மூடப்பட்டிருக்கும் இருக்கும் வரை, ஒவ்வொரு தரப்பினரின் நலன்களுக்கும் ஏற்ப, நாங்கள் முன்னோக்கி செல்வதில் சிரமம் இருக்கும் என்று நான் கூறுவேன்.


எனவே இந்த ஐக்கிய நாடுகள் சபையை மிகவும் பயனுள்ளதாக ஆக்குவோம். முதலில் அவற்றை அதிக பிரதிநிதித்துவப்படுத்துவோம். அதனால்தான் பிரான்ஸும் நானும் இங்கே மீண்டும் சொல்கிறோம், பாதுகாப்பு கவுன்சிலை விரிவாக்கப்படுவதற்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம்.


ஜெர்மனி, ஜப்பான், இந்தியா மற்றும் பிரேசில் ஆகியவை நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும். அத்துடன் ஆப்பிரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்த அவர்கள் விரும்பும் இரண்டு நாடுகளை சேர்க்க வேண்டும்" என்றார்.