கடந்த 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி 24ஆம் தேதி, உக்ரைன் மீது ரஷியா ராணுவ படையெடுப்பை தொடங்கியது. போர் தொடங்கி கிட்டத்த ஓராண்டு காலம் ஆகியுள்ள நிலையில், உலக அளவில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு எதிராக உலகின் பெரும்பாலான நாடுகள் ஓரணியில் திரண்டன. ரஷியாவுக்கு எதிராக பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக, பெரும்பாலான நாடுகளுக்கு ரஷியாவிடம் இருந்துதான் எண்ணெய் ஏற்றுமதியாகிறது.


ஆனால், உக்ரைன் பிரச்னையை தொடர்ந்து, பல்வேறு பொருளாதார தடைகள் ரஷியா மீது விதிக்கப்பட்டதால் உணவு விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவை பொறுத்தவரையில், ரஷியாவுக்கு எதிரான நிலைபாட்டை எடுக்கவே இல்லை.


ஐநாவில் ரஷியாவுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டபோதிலும், அனைத்து தீர்மானங்களையும் இந்தியா புறக்கணித்தது. ரஷியாவுக்கு எதிரான கூட்டணியில் இந்தியாவை இணைக்க மேற்குலக நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவின. 


அதேபோல, பேச்சுவார்த்தையின் மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து சொல்லி வருகிறது. இதற்கு மத்தியில், இந்தியா மேலும் மேலும் மலிவான விலையில் ரஷிய எண்ணெயை வாங்கி வருகிறது.


ரஷியாவிடம் இருந்து வாங்கிய எண்ணெயை எரிபொருளாக சுத்திகரித்து ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் விற்று வருகிறது. அதேபோல, இந்தியாவில் சுத்திகரிக்கப்படும் எரிபொருள் ரஷியாவை சேர்ந்தவை அல்ல என்றும் கூறப்படுகிறது.


ரஷியாவிடம் இரும் எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்கா தடை விதிக்குமா என கேள்வி எழுந்த நிலையில், அதற்கு அமெரிக்கா வெளிப்படையாக பதில் அளித்துள்ளது.


இந்தியா மீது தடை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து விரிவாக பேசிய ஐரோப்பியா மற்றும் யூரேசியா விவகாரங்கள் துறை இணையமைச்சர் கரேன் டான்ஃபிரைட், "இந்தியாவுடனான உறவு மிகவும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.


அமெரிக்கா மற்றும் இந்தியாவின் கொள்கை அணுகுமுறை வேறுபட்டாலும், சர்வதேச விதிகளின் அடிப்படையில் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கும், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு மதிப்பளிப்பதற்கும் இருவரும் உறுதிப்பாட்டை பகிர்ந்து கொள்கின்றனர்" என்றார்.


 






தொடர்ந்து பேசிய அமெரிக்க எரிசக்தி வளத்துறை இணை அமைச்சர் ஜெஃப்ரி பியாட், "ரஷியாவின் எண்ணெய் கொள்முதலில் இந்தியாவின் அணுகுமுறை அமெரிக்காவுக்கு வசதியாக உள்ளது. ஆனால், இந்த பிரச்சினையில் நாங்கள் தொடர்ந்து நடத்தி வரும் உரையாடலை நாங்கள் மதிக்கிறோம்" என்றார்.