நிலநடுக்கத்தை முன் கூட்டியே உணர்ந்த பறவைகள் நிலை கொள்ளாமல் அலறி அங்குமிங்கும் ஓடும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.






திங்கள்கிழமை அதிகாலை (பிப்ரவரி 6, 2023) துருக்கி மற்றும் சிரியாவில்  7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு சக்தி வாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டது. மேலும், இரவு 7 மணி அளவில் மூன்றாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.0வாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால்  நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இதுவரை 2,300க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.  இந்த நிலநடுக்கம் துருக்கியின் மாகாண தலைநகரான காஸியான்டெப்பின் வடக்கே ஏற்பட்டது.  துருக்கியின் 10 மாகாணங்களில் இதுவரை 1,500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 7,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதற்கு முன்னர் 1999 இல் வடமேற்கு துருக்கியில் ஏற்பட்ட இதேபோன்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 18,000 பேர் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 


நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு "தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டன" என்று துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 


பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, துருக்கிக்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். . "துருக்கியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் உடமைச் சேதங்களால் வேதனை அடைந்துள்ளேன். உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். துருக்கி மக்களுக்கு இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது, இந்த துயரத்தை சமாளிக்க அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது. ,” என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.


பறவைகள், விலங்குகள் பூகம்பத்தை உணர்ந்து கொள்ளுமா?


உண்மையில் விலங்குகள் பூகம்பத்தை உணர்ந்து கொள்ளுமா என்றால், அதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை. விஞ்ஞானம் அதை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ஆனால் சீனா, ஜப்பான், இந்தோனேஷியா போன்ற நில நடுக்கம் அதிகம் நிகழக்கூடிய நாடுகள், ‘விலங்குகளுக்கு இந்த ஆற்றல் உண்டு’ என்று வாதிடுகின்றன. இயற்கையோடு மனிதன் ஒன்றி வாழ்ந்திருந்தால், மனிதனும் பூகம்பம் வருவதை முன்கூட்டியே அறிய முடியும் என்கிறார்கள்.


விலங்குகள் உண்பது, உறங்குவது எல்லாமே பொதுவாக தரையில்தான். தரைமீதுதான் பெரும்பாலான நேரங்களில் காதை வைத்துத் தூங்கும், தரைக்கும் விலங்குகளுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அதனாலே தரையில் ஏற்படும் மெல்லிய அதிர்வுகளைக்கூட அவற்றால் உணர்ந்து கொள்ள முடிகிறது.


ரயில் தண்டவாளத்தில் காதை வைத்தால் தூரத்தில் வரும் ரயில் சத்தம் கேட்பதைப் போல, தரையின் மீதே காதை வைத்திருப்பதால் தூரத்தில் ஏற்படும் நில நடுக்கத்தின் சத்தத்தைக் கேட்க முடிகிறது என்கிறார்கள்.