புத்தாண்டை இனிதே தொடங்கிய இந்த உலகத்திற்கு ஒரு மாதத்திற்குள் பேரிழவு பிறந்து விட்டது என்றே சொல்லலாம். இன்று துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய மோசமான பூகம்பத்தால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த பூகம்பம் உலகெங்கும் வாழும் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


சக்திவாய்ந்த நிலநடுக்கம்:


துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் மொத்தம் 10 ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்ற அமெரிக்காவின் கணிப்பு மக்களை இன்னும் சோகமடையச் செய்துள்ளது. ஏனென்றால் இன்று ஏற்பட்ட 3 நிலநடுக்கங்களும் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஆகும்.




இந்த பயங்கரமான நிலநடுக்கத்தால் சிரியாவை காட்டிலும் துருக்கி மிகவும் மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. உலகம் மிக மோசமான பாதிப்பை எட்டும் என்பதை டூம்ஸ்டே கடிகாரம் மூலமாக விஞ்ஞானிகள் எச்சரித்த இரண்டு வார காலத்திற்குள் இந்த மோசமான சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


டூம்ஸ்டே கடிகாரம்:


நோபல் பரிசு பெற்ற பல விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து 1947ம் ஆண்டு உருவாக்கிய கடிகாரம்தான் இந்த டூம்ஸ்டே கடிகாரம். 20ம் நூற்றாண்டில் உலகம் நவீனத்துவத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த அதே வேளையில், பல நாடுகளின் பேராசையாலும், போர்களாலும், மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பாலும் உலகம் அழிவை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. அதை எச்சரிக்கும் விதமாகவே இந்த டூம்ஸ்டே கடிகாரம் வடிவமைக்கப்பட்டது.


இந்த கடிகாரத்தில் உள்ள முள் 12 மணியை நெருங்கும்போது உலகம் அழிவு நிலையை சந்திக்கும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பாக உள்ளது. இதன்படி, 21ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை நிமிடங்களில் இருந்த இடைவெளி இந்தாண்டு தொடக்கத்தில் 12 மணியை நெருங்க எடுத்துக்கொள்ள உள்ள நேர இடைவெளி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.




அதாவது, கடந்த வாரம் டூம்ஸ்டே கடிகாரத்தில் 12 மணியை நெருங்க இன்னும் 90 விநாடிகளே இருப்பதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டதுடன், உலக நாடுகளையும் எச்சரித்தனர். உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் மாசு, பனிமலை உருகுதல், வெப்பநிலை மாற்றம், காலநிலை மாற்றம் என்று அசாதாரண சூழலை நோக்கி சென்று கொண்டிருந்தாலும் பல நாடுகளும் அதைப்பற்றி கவலைப்படாமல் மோசமான நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.


சுற்றுச்சூழல் பாதிப்பு:


விஞ்ஞானிகளின் இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகிய 2 வார காலங்களுக்குள் மோசமான. சக்திவாய்ந்த நிலநடுக்கம் துருக்கியை தாக்கியுள்ளது. இயல்பாகவே துருக்கி நாட்டின் கட்டமைப்பு நிலநடுக்கத்தை அதிகம் எதிர்கொள்ளும் அளவிற்குத்தான் உள்ளது. துருக்கி நாட்டில் 1999ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 17 ஆயிரம்  பேர் உயிரிழந்தனர். துருக்கி வரலாற்றிலே அது ஒரு கருப்பு ஆண்டாகவே அமைந்தது எனலாம்.





தற்போதைய இந்த நிலநடுக்கம் மீண்டும் துருக்கி வரலாற்றில் மிக மோசமான துயரத்தை பதிவு செய்துள்ளது. துருக்கி அதிகளவில் நிலநடுக்கங்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று விஞ்ஞானிகள் பல முறை எச்சரித்தும் அந்த நாட்டு அரசாங்கம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளாமல் கட்டிடங்களை கட்டுவதற்கு அனுமதி அளித்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளது. அதன் காரணமாகவே இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.


இதனால், இனி வரும் காலங்களில் துருக்கி மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தும், பொதுமக்களும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு செயலையும் செய்யாமல் இருப்பது மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கலாம். அதேசமயம் போர், இரு நாடுகள் மோதல் போன்ற மனிதர்களால் ஏற்படும் அழிவுகளையும் தவிர்ப்பது நல்லது ஆகும். இல்லாவிட்டால் துருக்கியை போன்ற துயரத்தை மற்ற நாடுகளும் சந்திக்கும் அபாயம் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


மேலும் படிக்க: Turkey Earthquake: நிலநடுக்கத்தால் அழியும் துருக்கி? சரிந்த வரலாற்று கோட்டை:10,000 பேர் பலியாக வாய்ப்பு?


மேலும் படிக்க: Turkey Earthquake: அடுத்தடுத்து 3 சக்திவாய்ந்த நிலநடுக்கம்; அச்சத்தில் துருக்கி சிரியா..? பலி எண்ணிக்கை 1600 ஆக உயர்வு..!