கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதக் காரணத்தால் நியூயார்க் நகரில் உள்ள பிரேசில் நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து நடைப்பாதைக்கடையில் இரவு நேர உணவைச்சாப்பிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


 உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பல்வேறு பொருளாதாரப் பிரச்சனைகள், வேலையிழப்புகள் போன்ற  சொல்ல முடியாத அளவிற்கு பல்வேறு இன்னல்களை மக்கள் சந்தித்துவந்தனர். முதல் அலை, இரண்டாம் அலை என  தொற்றின் தாக்கம் பல்வேறு வடிவங்களில் மக்களைத் தாக்கியது. இந்த வைரஸ் தொற்றிலிருந்து மக்களைக்காக்கவும், அவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தவும் தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ளது. இதனையடுத்து உலக நாடுகள் முழுவதும் தடுப்பூசி செலுத்துப்பணிகளை துரிதப்படுகின்றனர்.





இதுஒருபுறம் இருந்தாலும் நாட்டின் வளர்ச்சிக்கான பல்வேறு பணிகளை அந்தந்த நாட்டு அதிபர்கள் மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் தான் அமெரிக்காவின் நியூயார்க் நகரில், இன்று முதல் ஐக்கிய நாடுகளின் சபைக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதில் 193 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ள நிலையில், பலர் கொரோனா அச்சத்தின் காரணமாக காணொலி காட்சி மூலம் பங்கேற்கின்றனர். இதில் கலந்துக்கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி வருகின்ற செப்டம்பர் 23 ஆம் தேதி அமெரிக்காவிற்கு செல்லவிருக்கிறார். ஆனால் இந்த மாநாட்டில் சில நாட்டு அதிபர்கள் உரை நிகழ்த்துவதற்காக முன்னதாகவே  வந்துவிட்டனர். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்த மாநாட்டில் கலந்துக்கொள்வதற்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த அறிவிப்பினையடுத்து பலர் தடுப்பூசி செலுத்தாமல் கலந்துக்கொள்வதற்கு வந்துள்ளனர். அதிலும் குறிப்பாக பிரேசில் நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் பங்கேற்க வந்துவிட்டார். இவர் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்கு எந்த தடையும் இல்லை ஆனால் நியூயார்க் நகரில் உள்ள உணவகங்களில் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்றால், கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழைக் கட்டாயம் காண்பிக்க வேண்டும். இல்லாவிடில் அவர்களுக்கு அனுமதியில்லை. அவர் அதிபராக இருந்தாலும் விதிகளில் எந்த மாற்றமும் இல்லை தெளிவாகக்கூறிவிட்டனராம். இதனால் என்ன செய்வது தெரியாத நிலையில் தான், பிரபல ஓட்டலில் நடைபெறவிருந்த இரவு நேர விருந்தை அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தனது அமைச்சரவை உறுப்பினர்களுடன் நடைப்பாதைக்கடையில் சாப்பிட்டு இருக்கிறார்.



 


 இப்படி நடைப்பாதைக்கடையில் ஒரு நாட்டு அதிபர் பீட்சா சாப்பிட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், “ அதிபருக்கே இந்த நிலைமையா? என்ன செய்வது சட்டம் இப்படி இருக்கு?.. என்பது போன்ற கருத்துக்களைப் பதிவிட்டுவருகின்றனர். இந்நிலையில் இதுக்குறித்து கருத்தினைத் தெரிவித்துள்ள பிரேசில் நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோ,  இதுவரை நான் தடுப்பூசி செலுத்தவில்லை எனவும், கொரோனாவுடன் போராடும் அளவிற்கு என்னுடைய நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தான், நியூயார்க் மேயர் பில் டி பிளாசியோ, உலகத்தலைவர்கள் அனைவரும் தவறாமல்  தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பாக பிரேசியைச் சேர்ந்த போல்சொனாரோ ஐ.நா கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்கு முன்னதாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.