Israel - Hamas War: காஸா மருத்துவமனை மீதான தாங்கள் நடத்தவில்லை எனவும், ஹமாஸ் அமைப்பு தான் நடத்தியதாகவும் இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.


மருத்துவமனை மீது தாக்குதல்:


பாலஸ்தீனத்தை சேர்ந்த ஆயுதக்குழுவான ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் இடையேயான போர் 12வது நாளை எட்டியுள்ளது. ஏற்கனவே காஸா மீது தாக்குதல் நடத்தப்போவதகாவும், பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும் இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்நிலையில், தெற்கு காஸா பகுதியில் உள்ள அல்-அக்லி மருத்துவமனை மீது நேற்று நள்ளிரவில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 500 பேர் உயிரிழந்துள்ளதாக காஸா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


மிகப்பெரும் உயிரிழப்பு:


கடந்த 12 நாட்களாக நடைபெறும் போரில், ஒரே தாக்குதலில் அதிகப்படியான உயிரிழப்புகளை பதிவு செய்த சம்பவமாக இது மாறியுள்ளது. இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்திய ஒரு படுகொலை என பாலஸ்தீனிய அதிகாரசபையின் சுகாதார அமைச்சர் மை அல்கைலா தெரிவித்துள்ளார். ரபா நகரில்  நடைபெற்ற தாக்குதலில் 27 பேரும்,  கான்  யூனிசில் நடைபெற்ற மற்றொரு தாக்குதலில் 30 பேரும் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பாலஸ்தீன அரசாங்கம் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளது. ஜோடார்ன், எகிப்து மற்றும் கத்தார் போன்ற நாடுகளும் இந்த தாக்குதலுக்கு கண்டனங்களை பதிவு செய்துள்ளன.


இஸ்ரேல் ராணுவம் மறுப்பு:


மருத்துவமனை மீதான இந்த தாக்குதலை தாங்கள் முன்னெடுக்கவில்லை என இஸ்ரேல் ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் தவறுதலாக மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதகாவும் இதுதொடர்பாக அவர்கள் நடத்திய உரையாடலை இடைமறுத்து கேட்டோம் எனவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.


ஹமாஸ் அமைப்பு விளக்கம்:


இஸ்ரேல் ராணுவம் கூறுவது முற்றிலும் பொய், ராக்கெட்டுகள் எதுவும் மருத்துவமனை குண்டுவெடிப்பில் ஈடுபடவில்லை என்று ஹமாஸ் அமைப்பு விளக்கமளித்துள்ளது. தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் காஸா நகரத்திலோ அல்லது அதைச் சுற்றியோ எந்த நடவடிக்கையும் தாங்கள் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்துள்ளது.


பைடன் இஸ்ரேல் பயணம் & ரஷ்யா முயற்சி:


இந்த நிலையில் தான் அமெரிக்க அதிபர் பைடன் இன்று இஸ்ரேல் செல்ல உள்ளார். இந்த பயணத்தின் போது இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதோடு, காஸாவை ஆக்கிரமிக்கக் கூடாது மற்றும் அங்குள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கச் செய்வது தொடர்பாகவும் பைடன் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ரஷ்ய அதிபர் புதின் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு, போரை நிறுத்த வலியுறுத்தினார். ஆனால், ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்கும் வரை தாக்குதலை நிறுத்தமாட்டோம் என நேதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.