கனடாவில் உள்ள பிராம்ப்டனில் கவுரிசங்கர் மந்திர் என்று அழைக்கப்படும் ஒரு பிரபலமான இந்து கோவிலை மர்மகும்பல் ஒன்று சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   






இந்த செயலுக்கு டொரோண்டாவில் உள்ள இந்திய துணை தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய துணை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனடாவில் வசிக்கும் இந்திய சமூகத்தினருக்கு இந்த செயலானது கடும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. வெறுக்கத்தக்க காழ்ப்புணர்ச்சி காரணமாக செய்யப்பட்ட இந்த செயல் இந்திய சமூகத்தினரின் உணர்வுகளை ஆழமாக காயப்படுத்தி உள்ளது.






இதுதொடர்பாக நாங்கள் கனடா அதிகாரிகளிடம் எங்களின் கவலைகளை தெரிவித்துள்ளோம் என கூறப்பட்டுள்ளது. காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






இதற்கிடையில், பிராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுன், கவுரி சங்கர் மந்திர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். “இந்த வெறுக்கத்தக்க நாசக்கார செயலுக்கு எங்கள் நகரத்திலோ அல்லது நாட்டிலோ இடமில்லை. இந்த வெறுப்புக் குற்றம் குறித்த எனது கவலைகளை @ChiefNish மற்றும் @PeelPolice ஆகியோரிடம் தெரிவித்துள்ளேன். ஒவ்வொருவரும் தங்கள் வழிபாட்டுத் தலத்தில் பாதுகாப்பாக உணரத் தகுதியானவர்கள்” என டிவீட் செய்துள்ளார்.






கனடாவில் உள்ள இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரா ஆர்யா தனது டிவிட்டர் பதிவில், “பிராம்ப்டனில் உள்ள கௌரி சங்கர் மந்திர் மீதான தாக்குதல், இந்துக்களுக்கு எதிரான மற்றும் இந்தியாவுக்கு எதிரான கும்பலால் நடத்தப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் வெறுப்புவாதம் பரவி வந்த நிலையில், இப்போது இந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள், அடுத்து என்ன? இதை தீவிரமாக எடுத்துக் கொள்ளத் தொடங்குமாறு கனடாவில் உள்ள அரசாங்கத்தை நான் அழைக்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.