பெஷாவரில் நேற்று நடைபெற்ற பயங்கரவாத குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 83ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.






பாகிஸ்தான் நாட்டில், வடமேற்கு நகரமாக,  ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள பெஷாவரில் உள்ள மசூதியில்  நேற்று மதியம் வழக்கம்போல தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். அப்போது மதியம் 1.40 மணியளவில் திடீரென அங்கு குண்டு வெடித்தது. தொழுகையில் ஈடுபட்டிருந்த  பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 






இந்த தாக்குதலில் மசூதி கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 83 பேர் உயிரிழந்த நிலையில், 100 க்கும் மேற்பட்டோர்  காயமடைந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த மசூதியானது போலீஸ் குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் அமைந்திருந்ததாகவும், குண்டுவெடிப்பு நடந்த போது உள்ளே சுமார் 260 பேர் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. 


அதேசமயம் கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலர் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. 


கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட தனது சகோதரரும், தெஹ்ரீக்-இ-தலிபானின் தளபதியுமான உமர் காலித் குராசானியின் மரணத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியே இந்த தற்கொலைப்படை தாக்குதல் என்று அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.


தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) எனப்படும் தீவிரவாத அமைப்பு, கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தானில்  இஸ்லாமிய சட்டங்களை கடுமையாக அமல்படுத்தவும், அரசாங்கக் காவலில் உள்ள அந்த அமைப்பின் உறுப்பினர்களை விடுவிக்கவும் கூறி பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 






இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இந்த சம்பவம் உள்ளது. இது பாகிஸ்தானின் மீதான தாக்குதலுக்குக் குறைவானதல்ல, பயங்கரவாதம்தான் நமது தேசிய பாதுகாப்புக்கு முக்கிய சவாலாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்றார். மேலும் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.