கென்யாவில் வறட்சியால் தவித்த 6 ஒட்டகச்சிவிங்கிகள் பரிதாபமாக ஒரே இடத்தில் உயிரிழந்துள்ளன. இதுகுறித்த புகைப்படம் வெளியாகி பார்ப்பவர்களின் மனதில் ரணத்தை ஏற்படுத்துகிறது.
சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில், வாஜிரில் உள்ள சபுலி வனவிலங்கு பாதுகாப்பு மையத்திற்குள் ஆறு ஒட்டகச்சிவிங்கிகள் இறந்து கிடப்பதைக் காட்டுகிறது. உணவு மற்றும் தண்ணீரின்றி தவித்த ஒட்டகச்சிவிங்கிகள், வனப்பகுதிக்கு அருகிலுள்ள வறண்டு போன நீர்த்தேக்கத்தில் தண்ணீர் தேடிச் சென்றபோது சேற்றில் சிக்கி இறந்த பிறகு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. புகைப்படம் எடுத்த பிறகு அதன் உடல்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இந்த ஒட்டக சிவிங்கிகள் தண்ணீர் தேடித் தேடி அலைந்து திரிந்து ஓய்வடைந்த நிலையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
கடந்த செப்டம்பர் மாதம் முதலே கென்யாவில் வழக்கத்தை விட 30 சதவீதம் குறைவான மழைதான் பதிவாகியுள்ளது. கடும் வறட்சியால் கென்யாவில் மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகளும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வனவிலங்குகளும் அங்காங்கே தண்ணீர் தேடி அலைந்து மடிகின்றன. விலங்கினங்களை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து போர் அல்ஜி ஒட்டகச் சிவிங்கிகள் காப்பகத்தின் இப்ராகிம் அலி கூறுகையில், “பல விலங்குகளைக் காப்பாற்ற முடியாத நிலையில் இருக்கிறோம். வீட்டு விலங்குகளுக்கு எப்படியாவது பாதுகாப்பு கிடைத்து விடுகிறது. ஆனால் வன விலங்குகள்தான் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. ஆற்றங்கரையோரங்களில் விவசாயம் நடந்து வருவதால் ஒட்டகச் சிவிங்கிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் பிரச்சினை உள்ளது” என்றார்.
மற்றொரு புகைப்படம் ஐரிப் கிராமத்தின் உதவித் தலைவரான அப்டி கரீம், சபுலி வனவிலங்குக் காப்பகத்தில் உள்ள ஐரிப் கிராமத்தின் புறநகரில் இருக்கும் ஆறு ஒட்டகச்சிவிங்கிகளின் உடல்களைப் பார்ப்பதைக் காட்டுகிறது. இந்த புகைப்படம் டிசம்பர் 10ஆம் தேதி எடுக்கப்பட்டது.
கென்யாவின் கரிசா பிராந்தியத்தில் மட்டும் 4000 ஒட்டகச் சிவிங்கிகள் அபாய நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இவற்றைக் காக்க அவசர கால நடவடிக்கைகள் தேவை என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. கென்யாவில் நிலவி வரும் வறட்சியை தேசிய பேரிடர் என்று அந்த நாட்டு அதிபர் உஹுரு கென்யட்டா அறிவித்துள்ளார். இதற்கிடையில், கென்யாவின் தேசிய வறட்சி மேலாண்மை ஆணையம் கடந்த வாரம் வறட்சியால் பாதிக்கப்பட்ட 2.5 மில்லியன் மக்களுக்கு அவசர நிவாரண உதவியும் வழங்கியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்