தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோதமாக செயல்பட்ட தங்கச்சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 31 பேர் பலியான சம்பவம் ஒரு மாதத்திற்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 


தங்கச்சுரங்கம்:


உலகின் இரண்டாவது பெரிய கனிம வளங்களை கொண்ட நாடாக ஆப்பிரிக்கா உள்ளது. இங்குள்ள பல சுரங்கங்கள் கைவிடப்பட்ட தங்க சுரங்களாக உள்ளது. ஆனால் பல சுரங்கங்கள் சட்ட விரோதமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக பல சட்டவிரோத குழுக்கள்  செயல்பட்டு வருகிறது. பக்கத்து நாடுகளில் வேலை வாய்ப்பு இல்லாமல் வறுமையில் வாடும் மக்கள் இங்கு இடம் பெயர்ந்து இத்தகைய சுரங்களில் பணியாற்றி வருகின்றனர். 


மூடப்பட்ட சுரங்கம் என்பதால் எத்தகைய பராமரிப்பும் இன்றி எந்த நேரத்திலும் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற நிலையில் சட்ட விரோத குழுக்களால் இவை செயல்பட்டு வருகின்றன. கைவிடப்பட்ட சுரங்கள் ஏற்கனவே பல அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டு இருக்கும் என்பதால் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு சில இடங்களில் சுரங்களை தகர்க்க வெடி மருந்துகளை பயன்படுத்துகிறார்கள். இந்த குழுக்களின் ஒரே இலக்கு தங்கம் மட்டும் தான் என்கிற நிலையில் தொழிலாளர்களின் உயிரெல்லாம் தூசி அளவு கூட மதிக்கப்படவில்லை. 


31 பேர் உயிரிழப்பு:


இப்படியான நிலையில் தென்னாப்பிரிக்காவின் பழைய தங்கச் சுரங்கப் பகுதியில் நடந்த விபத்தில் 31 பேர் பலியாகியுள்ளனர். மத்திய ஃப்ரீ ஸ்டேட் மாகாணத்தில் உள்ள வெல்கோம் நகரில் உள்ள அந்த சுரங்கத்தில் அண்டை நாடான லெசோதோவைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வந்ததாக சொல்லப்படுகிறது. தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய தங்கச் சுரங்க நிறுவனமான ஹார்மனிக்கு சொந்தமான இந்த சுரங்கம் 1990 ஆம் ஆண்டிலேயே மூடப்பட்டிருந்தது. அங்கிருந்த கனிம வளங்கள் தீர்ந்து விட்டதால் மூடப்பட்ட இந்த சுரங்கத்தில் சட்ட விரோதமாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு வந்தது. 


இந்நிலையில் கடந்த மே 18 ஆம் தேதி  நடந்த எதிர்பாராத வெடி விபத்தில் சுரங்கம் இடிந்து விழுந்துள்ளது. இதில் 31 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்லனர். தங்களது  உறவினர்களைக் காணவில்லை  என தொழிலாளர்கள் தரப்பு குடும்ப உறுப்பினர்கள் புகார் அளித்த பின் தான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சுரங்கத் தொழிலாளர்கள் இறந்ததாகக் கருதப்படும் சுரங்கத்தில் மீத்தேன் வாயு அளவு ஆபத்தான முறையில் இருப்பதால் அவர்களின் உடலை தேடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய கனிம மற்றும் எரிசக்தி வளத் துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தென்னாப்பிரிக்காவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.