Modi Visit Egypt : இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு சென்றடைந்தார்.  இந்த பயணம் இந்திய-எகிப்து நாடுகளுக்கு இடையேயோன உறவில் முக்கியமானதாக இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.


அமெரிக்காவில் என்ன நடந்தது?


3 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி கடந்த 20ம் தேதி அன்று இந்தியாவிலிருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகைக்கு வந்த பிரதமர் மோடிக்கு, அங்கு முழு அரசு மரியாதை வழங்கப்பட்டது. அதிபர் ஜோ பைடனே தனது மனைவியுடன் சேர்ந்து நேரில் வந்து பிரதமரை வரவேற்றார். 


இதனை அடுத்து, இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக, மோடி மற்றும் பைடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து வாஷிங்டனில் அமெரிக்க அரசு சார்பில் வழங்கப்பட்ட பிரமாண்ட விருந்தில் மோடி பங்கேற்றார். மேலும், அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினர். 


எகிப்து சென்ற மோடி


அமெரிக்காவின் தனது மூன்று நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து இரண்டு நாட்கள் பயணமாக எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு சென்றார். மெய்ரோ விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, எகிப்து பிரதமர் முஸ்தபா உற்சாகமாக வரவேற்றார். 26 ஆண்டுகளுக்கு பிறகு சென்ற இந்திய பிரதமருக்கு சிவப்பு கம்பள வரவேற்புடன் ராணுவ மரியாதையும்  அளிக்கப்பட்டது.






அதாவது, 1997ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் எகிப்து செல்வது இதுதான் முதல் முறை. முன்னதாக, 1997ஆம் ஆண்டு இந்திய பிரதமராக இருந்த ஐகே குஜ்ரால் எகிப்து பயணம் மேற்கொண்டிருந்தார். கடந்த ஜனவரி மாதம் எகிப்து அதிபர் எல்-சிசி விடுத்த அழைப்பின் பேரில், தற்போது பிரதமர் மோடி எகிப்துக்கு சென்றுள்ளார்.


என்ன பிளான்?


இரண்டு நாட்கள் பயணமாக எகிப்து சென்ற பிரதமர் மோடி, முதலில் இன்று இரவு 8 மணிக்கு எகிப்து பிரதமர் முஸ்தபா மத்பௌலியுடன் வட்ட மேசை சந்திப்பில் பங்கேற்கிறார். அதன்பின், இரவு 8.40 மணிக்கு எகிப்தில் வசிக்கும் இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்து உரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இரவு 9.20 மணிக்கு எகிப்தின் தலைமை மத குருவை சந்திக்க இருப்பதாக தெரிகிறது.


நாளை ஜூன் 25ஆம் தேதி பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அல்-ஹகிம் மசூதிக்கு செல்கிறார். அதைத் தொடர்ந்து எகிப்து அதிபர் மாளிகைக்கு செல்லும் பிரதமர் மோடியை, அந்நாட்டின் பிரதமர் சிசி அங்கே வரவேற்க உள்ளார். அங்கு இருதலைவர்களும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. இதனை தொடர்ந்து மோடிக்கு அரசு விருந்தும் அளிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.