ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023 உச்சி மாநாடு நாளை (பிப்ரவரி 24) தொடங்குகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில்  "புது இந்தியா: உள்நோக்கிப் பார்த்து அணுகுவது" என்ற கருப்பொருளில் சமூகத்தில் முத்திரைப் பதித்த தொழில் அதிபர்கள்,  கலை, எழுத்துத்துறைகளின் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் தங்களின் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ள உள்ளனர். 


ஐடியாஸ் ஆஃப் இந்தியா:


இந்தியாவில் பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கும் இந்த நேரத்தில் நடைபெறும் ஏபிபி நெட்வொர்க்கின் "ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023 மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. 


இந்த மாநாடு, உலக அளவில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ள சமூக - அரசியல் நிகழ்வுகளுக்கு மத்தியில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு உச்சிமாநாட்டில், 'புது இந்தியா: உள்நோக்கிப் பார்த்து அணுகுவது' என்பது கருப்பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. 


ஏபிபி ஊடக குழுமத்தின் இந்த மாநாட்டில்  இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முத்திரைப்பதித்த, தொழில்துறையைச் சேர்ந்த சாதனையாளர்கள்,  இளம் படைப்பாளர்கள், கலை மற்றும் எழுத்துத்துறையின் வெற்றியாளர்கள், பாராட்டப்பட்டவர்கள், அறிவுகூர், அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள் என பல்துறை ஜாம்பவான்கள் பங்கேற்பதோடு மட்டுமல்லாமல் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.


முக்கிய தலைப்பில் உரையாற்றும் பிரிட்டன் முன்னாள் பிரதமர்:


மாநாட்டின் முதல் நாளான நாளை, 'இந்தியா மற்றும் உலகம்: புதிய அதிகார வர்க்கம்' என்ற தலைப்பில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் உரையாற்ற உள்ளார். காலை 10 மணி முதல் 10:45 வரையில், முக்கியத்துவம் வாய்ந்த இந்த தலைப்பில் லிஸ் டிரஸ் உரையாற்றுகிறார்.  


முக்கிய விவகாரங்கள்:


நாட்டின் ஹிஜாப் சட்டத்தை மீறிய 22 வயதான பெண் மாசா அமினியின் காவல் மரணத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள், குறிப்பாக பெண்கள் தெருக்களில் இறங்கியதை ஈரானின் வரலாறு கண்டுள்ளது. இதேபோல் வட அமெரிக்காவில் சமூக பழமைவாத சக்திகள் சேர்ந்து, தாராளவாத ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அச்சுறுத்துகின்றன.


தெற்காசியாவோ பொருளாதார ஸ்திரமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சிகள் இவற்றை ஆய்வுக்கு உட்படுத்துகிறது. எல்லைகளைத் தாண்டி சுதந்திரத்துக்காக உயிரைப் பணயம் வைத்து நுழைவதற்கு வழியில்லாமல் காத்திருக்கும் அகதிகளின் பிரச்சனைகள் தொடர்கின்றன. வேலைவாய்ப்பு மற்றும் உயரும் செலவுகள் ஆகியவை வீடுகளில் முக்கியப் பிரச்சினைகளாக மாறிவிட்டன.


இந்தியாவை பொறுத்தமட்டில்  2024 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ளது. உலக வரலாற்றில் இத்தகைய தருணத்தில் இந்தியா எங்கே நிற்கிறது? என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஒன்பது மாநிலங்களுக்கான தேர்தல், எழுச்சி பெற்ற தென்னிந்தியா, புத்துயிர் பெற்ற எதிர்ப்பரசியல் என உலகில் முக்கியமான அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில் இந்த உச்ச மாநாடு நடைபெறுகிறது.