Iceland Earthquake: ஐஸ்லாந்தில் 14 மணி நேரத்தில் அடுத்தடுத்து 800 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை அடுத்து அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.


800 முறை நிலநடுக்கம்:


வட அமெரிக்கா மற்றும ஐரோப்பாவுக்கு இடையே வட அட்லாண்டிக் மற்றும் ஆர்க்கடிக் கடலில் உள்ள நாடு தான் ஐஸ்லாந்து. ஐஸ்லாந்தில் மட்டும் 400க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இதனால், அங்கு எரிமலை வெடிப்புகள் அடிக்கடி நிகழும். அதே வேலையில் நிலநடுக்கங்களும் அங்கு நிகழும். இந்நிலையில், ஐஸ்லாந்தில் தென்மேற்கில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 


முன்னதாக, அக்டோபர் மாதத்தில் இருந்து தற்போது வரை ஐஸ்லாந்தில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் மட்டும் ஒரே நாளில் 2,200 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன்பிறகு, ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் நேற்று மட்டும் அடுத்தடுத்து 800 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 


எரிமலை வெடிக்கலாம்:


சுமார் 4,000 மக்கள் வசிக்கும் கிரிண்டாவிக் (Grindavik) வடக்கு பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஐஸ்லாந்தின் தென்மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் ஏற்பட்ட இந்த தொடர்ச்சியான நிலநடுக்கங்களில், மிகப்பெரிய நிலநடுக்கம் கிரிண்டாவிக் வடக்கே 5.2 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது.  தலைநகர் ரியேக்ஜேவிக்கில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜன்னல், கண்ணாடிகள் அதிர்ந்தன என்று உள்ளூர் ஊடகங்கள்  தெரிவித்துள்ளது. மேலும், வீட்டில் இருந்த பொருட்கள் ஆடியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.  சுமார் 14 மணி நேரத்தில் 800 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து உள்ளனர். 






தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை அடுத்து, அங்கு அவசர நிலையை அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து, எங்கு வேண்டுமானும், எந்த நேரத்திலும் எரிமலை வெடிப்பு நிகழ்வுகள் ஏற்படலாம் என்று ஐஸ்லாந்து நாட்டின் வானிலை  மையம் எச்சரித்துள்ளது.  இதனை அடுத்து, கிரிண்டாவிக் கிராமத்தில் உள்ள எரிமலைக்கு அருகில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் மாற்றுவதற்கான பணிகளை அந்நாட்டு செய்து வருகிறது.  மேலும், கிரிண்டாவிக் அருகே உள்ள பிரபல சுற்றுலா தளமான ப்ளூ லகூன் (Blue lagoon) பகுதியை அந்நாட்டு அரசு மூடியுள்ளது.


கூடவே, மூன்று இடங்களில் தகவல் மையங்களும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஸ்லாந்து அதிகாரிகள் அதிகாரப்பூர்வ அறிக்கையில், நில அதிர்வு நடவடிக்கையால் நாட்டில் எரிமலை வெடிப்புகளும் ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளது அங்குள்ள மக்களே பீதியடைய வைத்துள்ளது. 




மேலும் படிக்க


Chennai Air Pollution: மோசமான நிலையில் சென்னையின் காற்றின் தரம்.. அளவுக்கு மீறி வெடி வெடிக்க தொடங்கியதால் ஏற்பட்ட விளைவு..!


காசாவில் போர் நிறுத்தம்..? பேச்சுவார்த்தையில் திருப்பம்.. இஸ்ரேல் கோரிக்கையை ஹமாஸ் ஏற்குமா?